December 30, 2011

நிலவும் நானும் ....


உதித்ததும் மறைந்து மறைந்ததும் உதிக்கும் நிலவே - நீயும்
குதித்து விட்டாயா மென்பொருள் துறையில்...
வேகமாக நான் விண்மீனில் படுக்கை விரிக்கிறேன் - நீயோ
மேகப் போர்வை போர்த்தி உறங்குகிறாய் ...
உனை எண்ணி உண்ணாமல் காத்திருக்கிறேன் -- நீயோ
எனை எண்ணி உடல் தேய்கிறாய் ...
களிப்புறும் கவிதை உனக்காய்த் தொடுக்கிறேன் - நீயெனை
விளிக்கும் அழகினில் அதை மறக்கச் செய்கிறாய்....

December 29, 2011

நானே என்னைக் காதலிக்கிறேன்...

நீ இதமாய் காதலிக்கிறேன் என சொல்லத் தேவையில்லை ...
உன் இதயத்தின் ஓசை உணர்கிறேனடா...
நீ புதியதாய் கவிதைகள் சொல்லத் தேவையில்லை ..
உன் பார்வையே உயிருள்ள கவிதையடா ...
நீ பிறந்தநாள் வாழ்த்து சொல்லத் தேவையில்லை ...
நான் பிறந்ததே உனக்காகத் தானடா...
நீ விதவிதமாய் பரிசுகள் தரத் தேவையில்லை ...
நான் விரும்பும் பரிசே நீதானடா ...
நீ என்னைக் காதலிக்கத் தேவையில்லை ...
உன்னை விரும்புவதால் நானே என்னைக் காதலிக்கிறேன்...

December 27, 2011

2011

புது வருடமாம் ... கடந்த வருடத்தைப் புரட்டிப் பார்க்கிறேன்...
உன் வாழ்த்தோடு தொடங்கிய ஜனவரி மாதம்...
உன் காதலர் தினப் பரிசில் பொலிவுற்ற பெப்ரவரி மாதம்...
மாதம் முழுதும் தங்குமாறு மார்ச்சில் நீ கொடுத்த முத்தம் ..
ஏப்ரலில் நாம் ரசித்த உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம்..
சுட்டெரிக்கும் மே மாத வெயிலில் நாம் சுற்றித் திரிந்த கடற்கரை ....
உன் பிறந்த நாளையும் நம் பிரிவு நாளையும் ஒன்றாய்த் தந்த ஜூன் ..
உன் அருகாமையின்றி நான் வெறுத்த பிறந்தநாள் ஜூலையில் ...
என் பதினான்கு மாத பணிக்கு ஆகஸ்டில் நான் வைத்த முற்றுப் புள்ளி ..
புதிய கனவொன்றுடன் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய செப்டம்பர் ....
உனக்கு நிழற்படம் அனுப்ப அக்டோபரில் நான் அணிந்த தீபாவளி உடைகள் ...
இரவானால் இம்சைகள் கூட்டிய நவம்பர் மாத மழை நேரங்கள் ...
அடுத்த வருடம் என்ன சாதிக்கலாம் எனக் கனவிலேயே கழிந்த டிசம்பர் ...

December 23, 2011

விடையில்லா வினாக்கள் !!!

தனியாக நடந்து செல்கையில் கண்சிமிட்டும் தெரு விளக்கு
உன்னோடு வரும் பொழுது ஏனோ கண்மூடிக் கொள்கிறதே
நம் காதலைக் கண்ட நானத்திலோ ?
ஒற்றையாய் நடக்கும் பொழுது ஒளிந்துக் கொள்ளும் மேகம்
ஒன்றாய் நடக்கையில் மழைக்கரம் நீட்டுகிறதே
நம்மை ஒரேக் குடையில் இணைக்கவோ ?
நான் மட்டும் சென்றால் உடனே வரும் பேருந்து
இருவரும் சென்றால் தாமதம் செய்கிறதே
நம் காதல் நொடிகளை வளர்க்கவோ ?

December 18, 2011

உன் காதல்


பெருமழையில் குடை ---- உன் பார்வை !

பனியிரவில் போர்வை ---- உன் சுவாசம் !

குளிர்மாலையில் தேநீர் ---- உன் ஸ்பரிசம் !

அதிகாலையில் நாளிதழ் ---- உன் அழைப்பு !

சுடும்வெயிலில் பனிக்கூழ் ---- உன் முத்தம் !

December 15, 2011

(ஏ)மாற்றம் !

உன் மடி சாயும் நேரமெல்லாம் மாலைப் பொழுதென மாறினால்
இவ்வுலகில் காலைக் காண்பது அரிதாகிப் போகும் !
உன் விரல் கோக்கும் நிமிடமெல்லாம் மழைப் பொழிந்தால்
இவ்வுலகின் தாகம் தணிந்து விடும் !
உன் விழி காணும் தருணமெல்லாம் விடியல் என்றானால்
இவ்வுலகம் இரவென்பதை மறந்து விடும் !
என கனவுகள் வளர்த்து ...
என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன் .

December 13, 2011

புன்னகை

உன் சுவாசம் பெற்று வாசம் சூடிக் கொண்டது காற்று
உன் எண்ணம் பார்த்து வண்ணம் பூசிக் கொண்டன பூக்கள்
உன் பார்வை பட்டு பனிப்போர்வை விரித்துக் கொண்டன மரங்கள்
ஆனால்
உன் அனிச்சைப் புன்னகை ஒன்று போதும்
நான் மூர்ச்சையாகிப் போக ....

December 10, 2011

வெறுமை

பள்ளிக் காலங்களில் பார்வைகள் பகிர்ந்தாய்...

கல்லூரி நாட்களில் குறுஞ்செய்திகள் தொடுத்தாய்...

அலுவல் நேரங்களில் தொலைபேசியில் தொடர்ந்தாய்...

அத்தனையும் தொலைத்து தனிமையில் நானிருக்கும்போது மட்டும்

ஏன் இந்த வெறுமையை பரிசளிக்கிறாய் ?

விலகிச் சென்றாலும் விடாமல் நீளும் உன் பிரிவு ....

பிரிந்து சென்றாலும் பிரியாமல் உலுக்கும் உன் நினைவு 

நினைவில் கொண்டாலும் தொடரும் உன் கனவு ....

கனவு கலைந்ததும் தலையணை நனைக்கும் கண்ணீர்....

என உன் பரிசுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது ...

இத்துடன் நிறுத்திக்கொள் நான் நிறைந்து விட்டேன் .....

November 27, 2011

மழைக் காதல்

இருள் விழுங்கிய காலை
இதயம் வருடிப் போன உன் கண்கள்

குளிர் நிரம்பிய காற்று
குதூகலமூட்டும் உன் விரல்கள்
மழைக் கொட்டும் மேகம்
மனதில் நீ விதைத்துப் போன மோகம்
ஜன்னலோரச் சாரல்
இடைவிடாத உன் உரையாடல்
மரமுதிர்க்கும் துளிகள்
நீ உதிர்க்கும் புன்னகை
என்று என்னைத் தொடரும் அனைத்தும் நீயாகவே தோன்ற
முழுதாய் நனைகிறேன் மழையில் !!!

November 6, 2011

குடை

குடை விரித்து வெயில் மறைப்பதில்லை..

குடை நனைத்து மழை எதிர்ப்பதில்லை ..

ஆனால் உன் விழிகண்டால் மட்டும்..

குடையாய் விரிகிறது என் மனம் ..


October 6, 2011

அந்த நாள் ஞாபகம் ....



நிலவொளியில் நான் நடந்து செல்ல கைகோத்துக் கொள்ளும் உன் நினைவுகளும்  ..

காலையில் என்னை எழுப்பும் உனக்குப் பிடித்தப் பாடலின் அலார ஓசையும்  ...

போர்வை வேண்டா  இரவில் உன் குளிர்கரம் தேடும்  என் கனவுகளும் ....

உன் பின்னூட்டங்கள் வேண்டி காத்திருக்கும் என் கவிதைகளும் ...

என் கைபேசியில் அழிக்க மனம் வராத உன் குறுஞ்செய்திகளும்...

மாலைநேரம் தேநீர் அருந்தும் நீ பரிசளித்த தேநீர் கோப்பையும் ..

இரவு நேரமொன்றில் நாம் ஒன்றாக நடந்து கடந்த பாதையும் ...

உன்னுடன் நானிருப்பதாக உணர்த்த...


நான் மட்டும் ஏனோ நாம் பிரிந்து விட்டதாகச் சொல்லித் திரிகிறேன் ...


September 17, 2011

அந்த ஒரு மணி நேரத்தில்

வார்த்தைகள் பகிர்ந்துக் கொண்ட அந்த புல்வெளியில்...

வானவில்லொன்று உன் கண்ணில் கண்டேன் ...

மழைக்கு ஒதுங்கி உன்னருகே நிற்கையில் ...

உன் பார்வை உரசி மீண்டும் மீண்டும் நனைந்தேன் ...

பிரியாவிடைக் கொடுத்து பேருந்தில் ஏறியவுடன்...

உன் புன்னகையில் இடப்பக்க இதயம் தொலைத்தேன் ...

கடந்து சென்று விட்ட அந்த ஒரு மணி நேரத்தில் ...

நடந்து விட்ட மாற்றங்கள் ஏனோ இன்னும் மறையாமல் ...


August 15, 2011

ம்ம்ம்ம் !!!!!


உனக்கு பிடித்த அந்த ஒற்றை வார்த்தை...

நீ உதிர்க்கும் பொழுது அது சிறுகவிதை ...

உன் கவிதையோடு தொடங்கும் என் இரவு ...

என் கனவினூடே தொடரும் நம் உறவு ....

தடம் மாறும் இந்த கவிதை ..

உனக்காக அல்ல... எனக்காக...

August 14, 2011

இந்தியர் நாங்கள் !!!


ஒன்றுபட்டு நாங்கள் வீழ்ந்திடாது வாழ்ந்திடுவோம் ......
இரண்டில் ஒன்று பார்த்திடுவோம் எல்லைப்போர்களை....
மூன்று நிறக் கொடியில் வெண்மை எங்கள் மனத்தின் நிறம் ....
நான்கு திசைகளும் வியக்க  ஒற்றுமை ராகம் இசைத்திடுவோம்....
ஐந்து புலன்களையும் இந்தியத்  திருநாட்டிற்கு அற்பணித்திடுவோம்...
ஆறாம் அறிவுக்கு எட்டாத கல்வியையும் கலைகளையும் கற்றிடுவோம்...
ஏழாம் பிறவியெடுத்தாலும் இந்தியநாட்டில் பிறந்திடவே விழைந்திடுவோம் .....
எட்டாவதாக ஒரு கண்டம் அமைத்து இந்தியர்கள் மட்டும் அங்கு குடிபுகுவோம்...
ஒன்பது கோள்களை வணங்கவும் செய்வோம் அவற்றின் இயக்கமும் அறிவோம் ...
பத்தாம் கோளொன்றில் புதிதாய் பாதம் பதித்து அங்கும் பசுமைப்புரட்சி செய்வோம்...  
  

August 7, 2011

நட்பு !

வாழ்வென்னும் பெருமழையில் ....

வானவில்லாய் என் கனவு ...

கருமேகமாய் என் துயரம் ...

துளிகளாய் என் ஆசை...

மின்னலாய் நம் உறவு ...

இடியாய் நம் பிரிவு ...

ஆனால் அத்தனையும் மறந்தேன் ...

குடையாய் வந்த உன் நண்பர்கள் தின வாழ்த்தில் ...

August 6, 2011

காணவில்லை !!!

வலக்கையால் கவிதைகளைக் கிறுக்கிக் கொண்டே ...
தற்செயலாய் இடக்கையைப் பார்க்கின்றேன்..
கிறுக்கலாய்த் தோன்றும் கைரேகையில்..
காதல் ரேகையைக்  காணவில்லை !!!


August 2, 2011

தூக்கம்


தூக்கம் இல்லாமல் தவிக்கும் தேர்வுக்கு முதல் நாள்

தூக்கம் தொலைந்த இரவில் ஒலிக்கும் தூரத்து இசை


தூக்கம் கலைக்கும் விதமாக வரும் வினோதக் கனவு

தூக்கம் இல்லா கடலுக்கு துணைசெல்லும் கலங்கரை

தூக்கம் வந்தாலும் சமாளிக்க வேண்டிய ஆசிரியர் உரை

தூக்கம் வரச் செய்யும் பேருந்தும் ஜன்னலோரக் காற்றும்

தூக்கம் வர கையகப் படுத்திக் கொள்ளும் 400 பக்க நாவல் 

தூக்கம் தேடும் குழந்தைக்கு பரிசாகக் கிடைக்கும் தாலாட்டு

தூக்கக் கலக்கத்தில் தோன்றுகின்ற அரைப்பக்க கவிதை

அத்தனையும் நீயாகிப் போனாயடா .......

இனி நான் எங்ஙனம் தூங்குவேன் ?

July 9, 2011

பற்றாக்குறை

உன் புன்னகையெல்லாம் புதைத்து வைக்க சிறந்ததொரு இடமில்லை
என் இதயத்தைத் தவிர...
உன் பார்வையெல்லாம் பதித்து வைக்க நல்லதொரு இடமில்லை
என் கண்களைத் தவிர... 
உன் எண்ணமெல்லாம் எழுதி வைக்க ஏற்றதொரு இடமில்லை
என் மனதைத் தவிர ...
என் காதலை மட்டும் நீ வைத்துக் கொள் என்னுள் இடப் பற்றாக்குறை .....
   

July 7, 2011

விசைப்பலகை

கடவுச்சொல்லில் இருக்கும் உன் பெயரை .....


விரல்களால் விசைப்பலகையில் தீண்டும்போழுது .....

செந்நீர் செல்லும் நாளமெல்லாம் உன் நினைவால் நிரம்பிக் கொள்ள.....

கணினித்திரையைப் பார்த்து என் காதலுக்கு திரையிட்டுக் கொள்கிறேன்.....


July 5, 2011

நானும் என் செல்பேசியும் !!!

நொடிக்கொரு குறுஞ்செய்தி ! 

நிமிடத்திற்கொரு தவறிய அழைப்பு !

நாழிகைக்கொரு ஐந்து நிமிட உரையாடல் !

மணிக்கொரு முறை செல்லமாய் நலவிசாரிப்பு !

நாளைக்கொருமுறை இணையத்தில் ப்ரியமாய் பகிர்வு !

வாரத்திற்கொருமுறை சிறு ஊடலும் பொய்க்கோபமும் !

மாதத்திற்கொருமுறை அரைமணி சந்திப்பும் பிரியாவிடையும் !

இன்று அத்தனையும் தொலைத்துத் தவிக்கிறேன்...

கண்டங்கள் கடந்து வரும் உன் ஒற்றை அழைப்பின் பொழுது மட்டும் .........

உயிர் பெறுகிறோம் நானும் என் செல்பேசியும் !!!


July 4, 2011

தோன்றும் !!!

உன் விழிகள் காணும்போது ...விரல்கள் கோக்கத் தோன்றும் !!!

உன் விரல்கள் கோத்துக் கொண்டால் ....இதழ்கள் சேர்க்கத் தோன்றும் !!!

நம் இதழ்கள் சேரும்பொழுது ....என் இமைகள் மூடத் தோன்றும் !!!

இமைகள் மூடிக்கொண்டே ....இறந்துவிடத் தோன்றும் உன் பிணைப்பில்!!!


June 23, 2011

வானப் பறவை !!!


என் கனவைக் கலைத்துச் சென்ற பறவை ....

என் நினைவை உலுக்கிச் சென்ற பறவை ....

என் மனதை உடைத்துச் சென்ற பறவை....

என் காதலைக் கடத்திச் சென்ற பறவை ....

ஆனாலும் அந்த பறவையை நேசிக்கிறேன் ....

அவனை சுமந்து செல்வதால் ....!!!

June 21, 2011

விசித்திர உலகம்

நீ விதைத்ததோ காதல் ...

நான் வளர்த்ததோ கவிதை ...

நமக்கு விளைந்ததோ பிரிவு ...

June 15, 2011

கோடை மழை

குளிர்கால காலையில் வெந்நீர் குளியல் முடித்து

நீ சிறு புன்னகையுடன் தலை சிலிர்க்கும் பொழுது

என் மீது சிதறும் துளிகளாக எண்ணிக் கொண்டு

கோடைக் கால குளிர்மழைத் துளிகளில்

குடை விடுத்து நடந்தேன்...நேற்று ...

மழை விட்டதும் மறைந்துவிட்டது மண்ணின் ஈரம் ....

ஆனால் உன் நினைவுகளால் விழிகளில் ஈரம்.....

இன்னும் மாறாமல் .....

June 12, 2011

தொலைந்த ரசனை !!!

உன் பார்வைகளையெல்லாம் ரசித்தேன்
நீ என்னைப் பார்க்கத்தவறினாய்... வெறுத்தேன்!!
உன் பொய்களையெல்லாம் ரசித்தேன்
நீ என்னிடமே பொய்யுரைத்தாய் ...விலகினேன்!!
உன் கனவுகளையெல்லாம் ரசித்தேன்
நீயே கனவாகிப் போனாய் ... மறந்தேன்!!

June 2, 2011

தோழி !!! நீ வாழி !!!

உன் வண்ணக்கனவுகளைச் சுமந்திட்ட இரவுகள் மட்டுமே முடிகிறது இன்று ....

உன் எண்ணங்கள் உயர்ந்திட விரியட்டும் வானம் என்றும் ...

உன் அருகாமையை உணர்ந்திட்ட நாழிகைகள் மட்டுமே முடிகிறது இன்று ....

உன் நினைவுகளைத் தீண்டும் நேரங்கள் நீளட்டும் என்றும் ...

உன் நட்பின் ஆழத்தால் உருவான பாதைகள் மட்டுமே மாறுகிறது இன்று .....

உன் உள்ளத்தோடு கொண்ட பயணம் தொடரட்டும் என்றும் ...

தொய்வுற்றபோழுதுகளில் தோள் சேர்த்துக் கொண்ட தோழியே ....

உன் தொலைதூரப் பயணத்திற்கு பிரியாவிடையளிக்கிறேன் .....


May 29, 2011

கடற்கரைக் காதல் !

ரைதுடைக்கப்பட்ட தூரத்து வானம் !

கால்கள் நனைத்துச் செல்லும் கடலலை !

கிளிஞ்சல்கள் விட்டுப் போகும் கடல் நுரை !

கீறல் பாத்திரத்தில் சுண்டல் விற்கும் சிறுவன் !

குடைக்குள்ளே களவுக்காதல் புரியும் காதலர்கள் ! 

கூன் விழுந்த முதுகோடு குறிசொல்லும் முதியவள் !

கெஞ்சலாய்த் தொடங்கும் முத்தத்திற்கான விண்ணப்பம் !

கேட்டும் கிடைக்காததால் சிறியதாய் ஒரு செல்லக் கோபம் !

கைகள் கோத்துக் கொள்ள வாய்ப்பளித்த இரண்டுமணி நேரம் !

கொட்டுமருவியாக உன் இதழ்கள் உதிர்க்கும் காதல் கவிதைகள் !

கோலமிட்டபடி என்னை உரசும் உன் விழியில் வழிந்தோடும் காதல் !
  

May 19, 2011

மெய்க்காதல்

பூக்களின் வகையறியா வயதில் நீ உதிர்த்த புன்னகைப்பூ

ங்கிய நிலவின் ஒளியில் நாம் பகிர்ந்த நிலாச்சோறு

மூச்சு முட்டும் பேருந்து நெரிசலில் உரசும் நம் விரல்கள்

நெஞ்சைத் தொடும் நிமிடங்களால் நிரம்பிய என் நாட்குறிப்பு

முட்கள் முழுவதுமாய் நீக்கி நீ எனக்கு பரிசளித்த ரோஜா

ண்கள் பார்த்து பேசும்பொழுது தவழும் உன் குறுஞ்சிரிப்பு

த்தம் இல்லா இரவில் நித்தமும் தோன்றும் உன் கனவு

சிந்தும் மழை நாட்களில் ஒற்றைக் குடையில் நம் பயணம்

சிப்பிகள் சேகரித்து நம் பெயர் எழுதிய கடற்கரை மணல்

விம்மி அழும் பொழுது கண்ணீர் துடைக்கும் உன் கைக்குட்டை

பொய்யேதும் சொன்னால் கோபத்தில் உயரும் உன் புருவம்

கார்கால மேகங்களில் உற்சாகமாய் நீ காட்டும் உருவங்கள்

செல்லும் இடமெல்லாம் தொடரும் உன் செல்லக் குறுஞ்செய்தி

வ்விடம் முடியும் என்றுத் தெரியா சாலையில் நம் பொடிநடை

வாழ்வின் முற்றுப்புள்ளியைத் தொலைக்கச் செய்த உன் விழிகள்

ள்ளுண்ட வண்டாய் என்னைத் திணறச் செய்யும் உன் ஸ்பரிசம்

ற்றலில் உணராமல் உன் தொடுதலில் உணர்ந்திட்ட மின்சாரம்

ன்னைக் கொல்லும் இவையெல்லாம் மெய்க்காதலின் விளைவோ ?

May 4, 2011

புதையல்

நாம் நடந்துசென்ற வழியெல்லாம் மைல்கற்களாக புன்னகையைக் குவித்துச்
சென்றோம் ....
திரும்பும் பொழுது பார்த்தால் குவியலின் நடுவிலெல்லாம் காதல்
புதையல் .....

April 15, 2011

வெட்கம்

உன் விரல் பிடித்து நடக்கும் பொழுது விலகிக் கொள்ளும் வெட்கம் .....


உன் விழிகள் பார்க்கும் பொழுது பற்றிக் கொள்கிறது !!



March 28, 2011

வலி

நீ விட்டுச் சென்றது சுவடல்ல காயம் ...

நீ தீண்டிச் சென்றது உடலல்ல உயிர்.....

நீ கொடுத்துச் சென்றது வரமல்ல வலி ....

நீ தூண்டிச் சென்றது கவிதையல்ல காதல் .........

நீ பறித்துக் கொண்டது கனவுகளல்ல நினைவுகள் ..


March 25, 2011

நிலா


நீ நிலா.... சூரியனாய் உனக்கு ஒளியூட்டுவேன் ....

நீ நிலா .... இரவாய் உன்னை ஏந்திக் கொள்வேன் ....

நீ நிலா .... பூமியாய் உன்னை ஈர்த்துக் கொள்வேன் ....

நீ நிலா .... வானாக உன்னைத் தாங்கிக் கொள்வேன் ....

நீ நிலா ..... குளிராய் உன்னில் ஒளிந்துக் கொள்வேன்....

நீ நிலா ..... மேகமாய் உன்னைத் தீண்டிக் கொள்வேன் ....

நீ நிலா ..... வட்டமாய் உன்னோடு உருவம் கொள்வேன் ....

நீ நிலா ..... கடலாய் உன்னை நோக்கி காதல் கொள்வேன் ....

நீ நிலா ..... விண்மீன்களாய் உன்னை சூழ்ந்துக் கொள்வேன்....

நீ நிலா .... வெண்மையாய் உன்னுடன் ஒன்றிக் கொள்வேன் ....

March 22, 2011

வானவில்




முதன் முதலில் நீ முத்தம் கொடுத்த பொழுது நான் துடைத்துக் கொண்ட ஊதா

நிறக் கைக்குட்டையைப் பார்த்து பார்த்து சிரித்துக் கொள்கிறேன்......


நிலா முற்றத்தில் நான் பார்க்கும் வின்மீன்களனைத்தும் நிலவு கருநீல

வானத்திற்கு பரிசளித்த முத்தங்களாய் எண்ணி நகைத்துக் கொள்கிறேன்....


காற்றோடு கரம் கோத்துக் கொள்ளும் நுரைகளெல்லாம் நீலக் கடலின் மீது

அலைகள் விட்டுச் செல்லும் அடையாளங்கள் என்று நினைத்துக் கொள்கிறேன்


இரவுகளில் பனிப் போர்வைப் போர்த்தி உறங்கும் பச்சை மரங்களெல்லாம் உன்

பாதம் படுவதற்காக நிழல் சுமந்து தவமிருக்கும் என்று எண்ணிக்

கொள்கிறேன்....


சோலைகளில் கொன்றை மரம் உதிர்க்கும்
மஞ்சள் பூக்களெல்லாம் உன் காதல்

நினைத்து நான் தவிக்கும் நிமிடங்களென கற்பனைகள் செய்துக் கொள்கிறேன்


மறையப் போகும் மாலை நேர செம்மஞ்சள் சூரியனைப் பார்த்தால் என் மடி

தேடும் உன் தலையென்று நினைத்துக் நிறைவேறாக் கனவுகள் வளர்த்துக்

கொள்கிறேன் ...


உதட்டு சாயத்தில் இருந்த
சிவப்பு உன் சட்டையில் ஒட்டிக் கொண்டவுடன் 

நமது மறு சந்திப்பின் பொழுது நீ சிவப்பு சட்டை அணிந்து வந்ததை

என்னவென்று சொல்ல...?

February 22, 2011

பனிக்கூழ்


நீ பனிக்கூழ் சாப்பிடும் பொழுது உருகுவது

அது மட்டுமல்ல நானும்தான் !
------------------------------------------------------------------------------
விழி முழுவதும் காதல் இருப்பதால் கொஞ்சம்
                                        
மங்கலாகத் தெரிகிறது நம் நட்பு ! 
----------------------------------------------------------------------
கரம் கோத்து இருவரும் நெருங்கும் நேரம்

தொலைவது இடைவெளியல்ல இதயம் !
----------------------------------------------------------------------------------
வழி மாறி நடப்பது கூடத் தெரியவில்லை எனக்கு

உனது விழி பார்த்து நான் நடக்கையில் !
-----------------------------------------------------------------------------------------------
விரல் நுனியில் உன் கைபேசி என்னைத் தட்டும் பொழுது

விரல்களில் பற்றிக் கொள்கிறது நாணம் !
------------------------------------------------------------------------------------------------------------
உணவகத்தில் என்ன வேண்டும் என என்னைக் கேட்கும்பொழுது

உன்னை எண்ணத் தோன்றும் எனக்கு !
------------------------------------------------------------------------------------------------------------------------------
விடியலின் பொழுது உன் குரல் கேட்க எண்ணி கைபேசியை துளாவும் போது

அழகாய் சிணுங்குகிறது உன் அழைப்பில் !
--------------------------------------------------------------------------------------------------------------------------------
உயிரோட்டத்துடன் உனக்கொரு பரிசளிக்கலாம் என்று நினைக்கும் பொழுதே

என்னைக் கொடு என்று இம்சிக்கிறது என் இதயம் !
--------------------------------------------------------------------------------------------------------------------------
உன் பேருந்து வரக்கூடாதென்று நானும் என் சிற்றுந்து வரக்கூடாதென்று   

நீயும் நினைக்கும் பொழுது வருகிறது இரண்டும் !

February 20, 2011

பரிதவிப்பில் முடிந்த பட்டமளிப்பு விழா

பட்டம் வாங்க வந்த என் மனதை பட்டமாக்கிவிட்ட உன்

பட்டாம்பூச்சி விழிகளுக்கு சொல்லிவிட்டாயா ?

நான் உன்னை காதலிப்பதை

உயிர்வளி உள்ளிழுக்கும்போது திணறச் செய்யும் உன்

காதல் சுவாசத்திற்கு சொல்லிவிட்டாயா ?

நான் உன்னை நேசிப்பதை

நான் சொல்லிவிட்டேன் என் இதயத்திடம் ......

அவன் உனக்கில்லை என்று .....

ஆனால் .....

நான்காண்டு கல்லூரியில் உன்னை மட்டும் தேடிய என் விழிகள் ...

ஆய்வகத்தில் உன் அருகாமையை உணர்ந்த என் உணர்வுகள் ....

வகுப்பறையில் உன் ஆற்றலை கண்டு வியந்த என் உள்ளம் ...

இவையனைத்தும் ஏற்க மறுக்கின்றன உன் நிரந்தர பிரிவை ....

February 5, 2011

பரிசு

உனக்காக சேர்த்து வைத்த வண்ணங்களை
        
வானவில் கேட்டதும் வாரிக் கொடுத்துவிட்டேன் !

உனக்காக சேகரித்து வைத்த துளிகளை

மேகம் கேட்டதும் அள்ளிக் கொடுத்துவிட்டேன் !

உனக்காக கோத்து வைத்த விண்மீன்களை
        
வானம் கேட்டதும் விட்டுக் கொடுத்துவிட்டேன் !

உனக்காக காத்திருக்கும் உயிரை மட்டும்
           
பாதுகாத்து வைத்திருக்கிறேன் !

நீ காதலனானவுடன் பரிசளிக்க........
 
             

January 26, 2011

கடவுச் சொல்


முதலாமாண்டு

நான் கல்லூரியில் சேர்ந்த நாள் ஞாபகத்தில் இல்லை... ...

உன்னைக் கண்ட நாளை எண்ணி அவ்வப்போது சிரித்திருக்கிறேன் ....

இரண்டாமாண்டு  

உன்னிடம் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதில்லை....

உன் பிறந்த நாளன்று கடவுளிடம் கோரிக்கைகள் வைத்திருக்கிறேன் ...

மூன்றாமாண்டு 

உன் கைபேசிக்கு குறுஞ்செய்தி தொடுத்ததில்லை....

உன் கைபேசி எண் மட்டும் கண்டுபிடித்து நினைவில்கொண்டிருக்கிறேன்.......

நான்காமாண்டு

கல்லூரி வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர்ந்ததில்லை ..

முதல் வரிசையிலிருந்து கொண்டு உன்னை முகம் திருப்பி ரசித்திருக்கிறேன்

முதல் நாள் நீ தந்த பார்வை மின்சாரத்தை ஏனோ .....

நான்காண்டு மின்னும் மின்னணுவியலும் கடைசி வரை உணர்த்தவேயில்லை

இன்று

ஆம் !!! நீ கனவு போல் என்னை கடந்து சென்று விட்டாய் ..

கடவுச் சொல் மட்டும் உன் பெயர் சுமந்து கனக்கிறது....

January 22, 2011

தேநீர்

மழை சொட்டும் நேரத்தில்...
சுவாசம் முட்டும் தூரத்தில் ..
நாம் இருவரும் முழுவதும் நனைந்து ..

ரசனையுடன் கவிதைகள் பேசி நடந்து ...
செல்லெல்லாம் சிலிர்த்து ....
வீட்டுக்கு வந்தவுடன் .....
ஒரு ஈர முத்தம் தந்துவிட்டு ..
சூடான தேநீர் கொடுப்பேன்...
நீயோ தேநீர் என்போல் சுவையில்லை என்பாய் ...

இதழின் வரிகளை எண்ணிக் கொண்டே ....

கண்ணாமூச்சி


கனவுகளில் உன்னைக் கண்டால்

கவிதைகளில் நனைகிறது காலை ...

விழிகளால் உன்னைத் தேடினால்

விழாக் கொண்டாடுகிறது என்னுள்ளம் .....

கரங்களால் உன்னைத் தீண்டினால்

கனாக் கோலம் வரைகிறது என் நாணம் ....

காதலைச் சொல்ல நினைத்தால் மட்டும்

ஒளிந்து கொள்கிறது என் குரல் ....


January 17, 2011

உயிர்க்காதல்

ருகாமையில் நீ...
ட்தின்னும் உன் பார்வை ...
தழ்கள் வருடும் உன் விரல்கள் ...
ரம் வற்றாத உன்னுடைய முத்தம் ...
ணர்வுகள் தூண்டும் உந்தன் வாசம் ...
மையாகிப் போகும் எந்தன் வெட்கம் ...
ன்னவென்று புரியாத எல்லையற்ற மோகம்...
தேதோ எண்ணங்கள் தோன்றும் ஏகாந்த நேரம்...
ம்புலனிலும் நிறைந்து நிற்கும் உன்னுயிர்த் தாகம் ...
ன்றாகத் தவிக்கும் இருவேறு இதயங்களின் துடிப்பு...
ராயிரம் கனவுகளோடு உன்னை எதிர்நோக்கியிருக்கும் நான் ...
ஒளடதம் இல்லாத இந்த நோய்க்கு பெயர்தான் உயிர்க்காதலோ ?

January 11, 2011

விண்மீன்

அன்று
மழை பொழிந்து குளிர்ந்த மாலை ...
குடை விடுத்து உன்னுடன் நான் .....
கிளை பிடித்து நீ உலுக்கி மீண்டுமொரு மழை செய்து . ...
விலை இல்லா காதல் சொன்னாய் ...
இன்று
நீல வானம் மொத்தமும் உலுக்கி உன் மீது விண்மீன் உதிர்த்து என் காதல் சொல்கிறேன்.....
நீயோ நான் உதிர்த்த முதல் விண்மீனிடம்...
என்னோடு சேரும் வரம் வேண்டி கண்களை மூடிக் கொண்டாய் .....
காதலைக் காணும் முன்னே....