December 20, 2013

மார்கழி ....

மார்கழி இரவில் உரசும் நம் ஸ்பரிசங்களால் வெம்மையாகும் சூழ்நிலை
சித்திரை மாத வெயிலையும் மிஞ்சுகிறது !

மார்கழி மாலையில் திணறும் என் சுவாசம்
வைகாசி முதல் நாம் ஒன்றாய் சுவாசிப்பதை நினைவூட்டுகிறது !

மார்கழி மாதத்து பனியை சுமந்திருக்கும் புல்லின் நுனி
ஆனி மாதம் நான் சுமக்க ஆரம்பித்த நம் கருவின் தூய்மை சொல்கிறது !

மார்கழியின் சற்றே வெம்மையான பகல்பொழுதுகள்
ஆடியில் நான் நீயின்றி வாடியதை உணர்த்துகிறது !

மார்கழியில் வீட்டு வாசல்களை அலங்கரிக்கும் கோலங்கள் 
ஆவணியில் நாம் சென்ற  கடற்கரையின் வண்ணமாக விரிகிறது !

மார்கழியில் குளிர்ந்திருக்கும் நீரைத் தொடும்பொழுது
புரட்டாசியில் நம்மை இணைத்துவைத்த மழைக்காலம் ஞாபகம் வருகிறது !

மார்கழி குளிரிலும் ஓயாமல் கேட்கும் கடலலைகளின் சப்தம் 
ஐப்பசியில் நம் தலை தீபாவளி பட்டாசுகள் போல் தோன்றுகிறது !

மார்கழி மாதத்து தண்மையில் நடுங்கும் தேகத்தை காக்கும் போர்வை
கார்த்திகையில்  என் பரீட்சை பயத்தை அணைத்து தேற்றிய உன் கரங்கள் !

மார்கழியும் மார்கழி குளிரும் எனக்கு புதிதில்லை ஆனால் இந்த
மார்கழி நம் காதலை வலுப்படுத்தவே உருவானதாய் எண்ணுகிறேன் !

மார்கழி அதிகாலை நேரங்களில் கோவில்களில் கேட்கும் பாடல்கள்
தை மாதத்தில் நீ  உரைத்த காதலைப் போல் தெய்வீகமாய் கேட்கிறது !

மார்கழித் திங்களில் பூக்கும் மார்கழிப்பூவின் நறுமணம்
மாசியில் சம்மதம் பெற்ற நம் காதலைப் போல் இளமையாய் இருக்கிறது !

மார்கழி மாத பனிப்படலத்தைத் தாண்டி உலகில் பிரவேசிக்கும் இளங்கதிர்
பங்குனியில் நமக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் போல் உதிக்கிறது !






December 10, 2013

ரசிக்கிறேன்

ஆளில்லா சாலைகளில் அடிக்கடி நடந்து சென்றோம் - காதலிக்கையில்
 
இன்றோ மக்கள் நிரம்பி வழியும் சாலையும் அரவமற்று தெரிகிறது 

நான் உன்னுடன் நடப்பதால் ....

ஒளிதீண்டா மரங்களிடையே அமர்ந்து பேசினோம் -காதல் புரிகையில் 

இன்றோ இலையுதிர்ந்த மரம் கூட நமக்காக  நிழல் விரிக்கிறது  

நான் உன்னருகில் இருக்கையில் ....

ஒருநாளில் ஒருமுறையாவது சந்திக்க நினைப்போம் - காதலில் 

இன்றோ ஒரு கணமும் உனைப் பிரிய மனம் மறுக்கிறது  

நான் உன்னில் கலந்ததால் .....

காலங்கள் விரைவாக நகர்ந்தாலும் 

காதல் மட்டும் கூடிக்கொண்டே செல்கிறது ....

அன்று உன் காதலில் திளைத்திருந்தேன்  ....

இன்றோ உன்னைக் கணவனாய் ரசிக்கிறேன் .... 

என் வாழ்வை வளமாக்கிய உன்னை என் வரமாய் 

நினைக்கிறேன் .....

June 8, 2013

பரிணாம வளர்ச்சி !!!

கவிதைகளுக்கு கொஞ்ச நாள் ஓய்வு தரலாம் !!!

     உயிருள்ள கவிதையொன்றுதான் என்னுடன் வாழப் போகிறதே !!!

கனவுகளுக்கு நிரந்தரமாக விடுமுறை அளிக்கலாம் !!!

     இருபத்தியோரு வருட கனவுதான் நினைவாகப் போகிறதே !!!

அலைபேசி அழைப்புகளுக்கு சில நாட்கள் பிரியாவிடை !!!

     அழைப்பு விடுத்த அலைபேசிதான் என்னருகிலிருக்கப் போகிறதே !!! 

விழியின் தேடல்கள்  ஒரு ஓரமாய் சென்று உறங்கலாம் !!!

     மின்சாரம் பாய்ச்சக்கூடிய கண்கள்தான் என்னோடு உறங்கப் போகிறதே !!!

ஆம் ! காதலான நீ கணவனாக பரிணாம வளர்ச்சியடையப் போகிறாய் !


என்றென்று ஏங்கிக் கொண்டிருந்த நம் திருமணம் மூன்று நாட்களில் ....

அதனால் , இதுவே காதலியாக உனக்கெழுதும் கடைசி கவிதை !!!





March 28, 2013

கீர்த்தி !!!

எல்லையின்றிப் பேசும் அன்புத் தொல்லையடி நீயெனக்கு !

மறையுமோ நம் இணைப்பு .....

பாசத்தை கங்கையென பொழியும் தங்கையடி நீயெனக்கு !

வற்றுமோ நம் உறவு .....

தொய்வுகளில் தோள் கொடுக்கும் தோழியடி நீயெனக்கு !

தொலையுமோ நம் நட்பு ....

மழையென விழிநீர் உதிர்க்கும் மழலையடி நீயெனக்கு !

நெருங்குமோ நமைப் பிரிவு .....

வேறு திசைநோக்கி பயணிக்கிறேன் ... ஆனாலும்

உன் நினைவுகளை சுமந்து கனக்கிறேன் ...

நேர்த்தியான வாழ்வில் கீர்த்தி பல நீ பெற்றிட

வாழ்த்துகிறேன் !! 

நீ நிறைவாக வாழ்க !!!


February 1, 2013

போலி(ளி) !


பள்ளிப் பருவ தோழமைகள் பதினேழைக் கடந்ததும் காணாமல் போனது .....

கல்லூரி நட்புகள் நான்கே வருடத்தில் அடையாளமற்றுத் தொலைந்தது .....

அலுவலக தொடர்புகளுக்கு வேலை முடிந்தபின் வேளையின்றிப் போனது  .....

அக்காவின் அன்போ அவள் திருமணத்திற்குப் பின் திரும்பாமல் சென்றது .....

தங்கைகளின் பாசம் ஆறு வருட விடுதி வாழ்க்கையில் கனவாய்  ஆனது .....

பெற்றோரின் அக்கறை அலைபேசி அழைப்போடு முடிந்தே போனது .....

எதுவும் வேண்டாம் .................

எனக்கு நீயிருக்கிறாய் என எண்ணிக்கொண்டே 

நெரிசலான மின்தொடர்வண்டியின் ஜன்னலோரம் சாய்கிறேன் !!!!

அருகில் ஒரு பெண்மணி அழகான குரலில் 

" போளி  !! போளி !! போளி !! போளி வாங்கிக்கமா !!! "

அப்பொழுதுதான் எனக்கு உறைக்கிறது .....

அத்தனையும் போலியென்று !!!




January 28, 2013

மனங்கொத்திப் பறவை !

இடை இறுக்கி ,
நெற்றி பரவும் கற்றைமுடி நீக்கி ,
ஆசையாய் கொடுக்கும் நீ கொடுக்கும் முத்தத்தில் 
தொடங்க வேண்டும் தினமிரவு ......
காலை அரைத் தூக்கத்தில் எழுந்து ,
எனை அணு அணுவாய் அளந்து ,
அழகாய் நீ கொடுக்கும் முத்தத்தில் ,
தொடங்க வேண்டும் அன்றையப் பொழுது .....
என நான் கனவுகள் கண்டு கிறங்கிக் கிடக்குமாறு 
மனம் கொத்திச் சென்றாயடா !



இதழிடுகை !

இமைக் கொள்ளா கனவுகள் நிரப்பி ,
இதழ் முழுதும் புன்னகை பொருத்தி,
இணைப் பிரியாமல் கதைகள் பேசி,
இடைவெளிக்கு இடமின்றி விரல் பிடித்து,
இரவுப் பொழுதின்  இனிமையை ரசிக்க ,
இரையும் கடற்கரைச்  சென்றால் 
ஆட்தின்னும் முத்தமொன்று தந்து என்னை 
ஆக்சிஜன் அள்ளி அள்ளிக் குடிக்க வைத்தாயே !!
அதுதான் 
என் கன்னம் விழுந்த முதல் காதல் முத்தம் !!!
மீண்டும் என்றென்று 
எனை ஏங்க வைத்த கடைசி முத்தமும் அதுவே !!! 




January 22, 2013

யாவும் பொய்தானா ?


என் கண்ணீர் உனக்கு பிடிக்கவில்லை என்றாயே ........

அடிக்கடி நீதான் என் முதலும் முடிவுமான உறவென்றாயே .......

நானுன்னை அழைக்கும் கணமெல்லாம் அலுவல் என்றாயே .......


ஒவ்வொருமுறை எனைப் பிரிகையிலும் வலிக்கிறது என்றாயே ........

நம் முதல் சந்திப்பில் கரம்பற்றிக் கொள்ளவா என்று வினவினாயே .......


எனக்கு  முத்தமிட்ட பொழுது இதுதான் உ ன் முதல் முத்தம் என்றாயே ......

விரல் படுகையில் முதன் முறை ஒரு பெண்ணுடனான தீண்டல் என்றாயே ......

இவை யாவும் பொய்தானா ?

சில நாட்களில் உன் காதலும் பொய்க்குமோ ?










January 3, 2013

ஓவியன் !!!


நிமிர்ந்து நிற்கும் மலர்கள் வான் நோக்க தலைகுனிந்து மண்நோக்கும்

குவளை மலரிடமிருந்து ஊதா வண்ணம் குழைத்துக் கொண்டான் !

நிறைந்து நிற்கும் விண்மீன்கள் நிலவுக்குத் துணை செல்ல தனித்திருக்கும்

இரவுவானிடமிருந்து கருநீல வண்ணம் இரவல் வாங்கிக் கொண்டான் !

விரைந்து வரும் அலைகள் நுரைகளோடு கைகோத்துக் கொள்ள பரந்திருக்கும்

கடலிடமிருந்து நீல வண்ணம் கடன் வாங்கிக் கொண்டான் !

விடியப் போகும் வேளையில் மரங்கள் பனிப்போர்த்தியிருக்க விழித்திருக்கும்

பசும்புல்லிடமிருந்து பச்சை வண்ணம் பறித்துக் கொண்டான் !

தலை நிறைக்கும்  பூக்களின் நடுவே தரை நிறைத்துக் கொண்டிருக்கும்

கொன்றைப்பூவிடமிருந்து மஞ்சள் வண்ணம் கொள்ளைக் கொண்டான் !

இரவு முடிய காத்திருக்கும் பகலுக்கு முகம் மறைத்து பிரிவு சொல்லும்

அந்தி நேர சூரியனிடமிருந்து செம்மஞ்சள் வண்ணம்  அள்ளிக் கொண்டான் !

உலகம் காண கண்ணும் சுவாசிக்க நாசியும் திறந்துக் கொள்ள குழந்தையின்

திறவாக் கரங்களிலிருந்து சிவப்பு வண்ணம் திருடிக் கொண்டான் !

களவாடிய வண்ணங்கள் கொண்டு மழைத் தூரிகையால்

வானச் சுவரில் வரைந்து விட்டான் வானவில் ஓவியம் !

ஓவியன் மட்டும்  ஒளிந்துக் கொண்டான் !!!