March 28, 2011

வலி

நீ விட்டுச் சென்றது சுவடல்ல காயம் ...

நீ தீண்டிச் சென்றது உடலல்ல உயிர்.....

நீ கொடுத்துச் சென்றது வரமல்ல வலி ....

நீ தூண்டிச் சென்றது கவிதையல்ல காதல் .........

நீ பறித்துக் கொண்டது கனவுகளல்ல நினைவுகள் ..


March 25, 2011

நிலா


நீ நிலா.... சூரியனாய் உனக்கு ஒளியூட்டுவேன் ....

நீ நிலா .... இரவாய் உன்னை ஏந்திக் கொள்வேன் ....

நீ நிலா .... பூமியாய் உன்னை ஈர்த்துக் கொள்வேன் ....

நீ நிலா .... வானாக உன்னைத் தாங்கிக் கொள்வேன் ....

நீ நிலா ..... குளிராய் உன்னில் ஒளிந்துக் கொள்வேன்....

நீ நிலா ..... மேகமாய் உன்னைத் தீண்டிக் கொள்வேன் ....

நீ நிலா ..... வட்டமாய் உன்னோடு உருவம் கொள்வேன் ....

நீ நிலா ..... கடலாய் உன்னை நோக்கி காதல் கொள்வேன் ....

நீ நிலா ..... விண்மீன்களாய் உன்னை சூழ்ந்துக் கொள்வேன்....

நீ நிலா .... வெண்மையாய் உன்னுடன் ஒன்றிக் கொள்வேன் ....

March 22, 2011

வானவில்




முதன் முதலில் நீ முத்தம் கொடுத்த பொழுது நான் துடைத்துக் கொண்ட ஊதா

நிறக் கைக்குட்டையைப் பார்த்து பார்த்து சிரித்துக் கொள்கிறேன்......


நிலா முற்றத்தில் நான் பார்க்கும் வின்மீன்களனைத்தும் நிலவு கருநீல

வானத்திற்கு பரிசளித்த முத்தங்களாய் எண்ணி நகைத்துக் கொள்கிறேன்....


காற்றோடு கரம் கோத்துக் கொள்ளும் நுரைகளெல்லாம் நீலக் கடலின் மீது

அலைகள் விட்டுச் செல்லும் அடையாளங்கள் என்று நினைத்துக் கொள்கிறேன்


இரவுகளில் பனிப் போர்வைப் போர்த்தி உறங்கும் பச்சை மரங்களெல்லாம் உன்

பாதம் படுவதற்காக நிழல் சுமந்து தவமிருக்கும் என்று எண்ணிக்

கொள்கிறேன்....


சோலைகளில் கொன்றை மரம் உதிர்க்கும்
மஞ்சள் பூக்களெல்லாம் உன் காதல்

நினைத்து நான் தவிக்கும் நிமிடங்களென கற்பனைகள் செய்துக் கொள்கிறேன்


மறையப் போகும் மாலை நேர செம்மஞ்சள் சூரியனைப் பார்த்தால் என் மடி

தேடும் உன் தலையென்று நினைத்துக் நிறைவேறாக் கனவுகள் வளர்த்துக்

கொள்கிறேன் ...


உதட்டு சாயத்தில் இருந்த
சிவப்பு உன் சட்டையில் ஒட்டிக் கொண்டவுடன் 

நமது மறு சந்திப்பின் பொழுது நீ சிவப்பு சட்டை அணிந்து வந்ததை

என்னவென்று சொல்ல...?