May 28, 2012

தற்காலிகப் பிரிவு !!!

நீ அமர்ந்து சென்ற நாற்காலியில்
நாள் முழுதும் அமர்ந்து கனா காண்கிறேன்
உன் மடி சேர்ந்ததாய் எண்ணிக் கொண்டு .....
நீ தீண்டிச் சென்ற இடமெல்லாம்
நானே தீண்டி உணர்விழக்கிறேன்
உன் விரலென்னைத் தொடுவதாய் நினைத்து .....
நீ அனிச்சையாய் நிற்கையில்
நான் பதித்துக் கொண்ட உன் நிழல்படம்
கண்டு நீயென்னை பார்ப்பதாய் நாணுகிறேன் ..... இவ்வாறு
இடையிடையே வரும் பிரிவுகள் உன்னை ஏனோ
இடைவிடாமல் நேசிக்கக் கற்பிக்கறது...

May 22, 2012

விந்தைக் காதல் !!!

ஒரு மாதப் பிரிவைக் கூட
ஒற்றை முத்தம் நெற்றியிலிட்டு
சுகமாய் மாற்றும் வித்தை எங்கு கற்றாயோ ?
இருநொடிப் பிரிந்தால் கூட உன்
இரு விழிகளின் காதல் காணமல்
நான் உருக என்ன மாயம் செய்தாயோ ?

May 8, 2012

வளையல் !

பெயர் சூட்டுகையில் முதன் முதலில் அம்மா அணிவித்த வளையல் !
பள்ளிக் காலத்தில் அழகாய் வட்டம் வரைய உதவிய வளையல் !
உடைந்தாலும் வண்ணங்கள் சேர்த்து விளையாட உதவிய வளையல் !
வாசல் கடக்கும் தோழிக்கு கையசைக்கையில் சிரித்த வளையல் !
வயதடைந்ததும் ஆசையாய் அத்தைப் பரிசாகக் கொடுத்த வளையல் !
வேலையில்லா பொழுதுகளில் பம்பரமாய் சுற்ற பயன்பட்ட வளையல் !
என எண்ணிலங்கா காலங்கள் வளையலோடு வாழ்ந்திருந்தாலும்
நீ என் கரம் பற்றியதும் வளையலாகிப் போன உன் விரல்கள் மட்டும்
ஏனோ என் வளைக்கரம் கடந்து உயிர் துளைத்துச் சென்றது !!!