January 28, 2013

மனங்கொத்திப் பறவை !

இடை இறுக்கி ,
நெற்றி பரவும் கற்றைமுடி நீக்கி ,
ஆசையாய் கொடுக்கும் நீ கொடுக்கும் முத்தத்தில் 
தொடங்க வேண்டும் தினமிரவு ......
காலை அரைத் தூக்கத்தில் எழுந்து ,
எனை அணு அணுவாய் அளந்து ,
அழகாய் நீ கொடுக்கும் முத்தத்தில் ,
தொடங்க வேண்டும் அன்றையப் பொழுது .....
என நான் கனவுகள் கண்டு கிறங்கிக் கிடக்குமாறு 
மனம் கொத்திச் சென்றாயடா !



இதழிடுகை !

இமைக் கொள்ளா கனவுகள் நிரப்பி ,
இதழ் முழுதும் புன்னகை பொருத்தி,
இணைப் பிரியாமல் கதைகள் பேசி,
இடைவெளிக்கு இடமின்றி விரல் பிடித்து,
இரவுப் பொழுதின்  இனிமையை ரசிக்க ,
இரையும் கடற்கரைச்  சென்றால் 
ஆட்தின்னும் முத்தமொன்று தந்து என்னை 
ஆக்சிஜன் அள்ளி அள்ளிக் குடிக்க வைத்தாயே !!
அதுதான் 
என் கன்னம் விழுந்த முதல் காதல் முத்தம் !!!
மீண்டும் என்றென்று 
எனை ஏங்க வைத்த கடைசி முத்தமும் அதுவே !!! 




January 22, 2013

யாவும் பொய்தானா ?


என் கண்ணீர் உனக்கு பிடிக்கவில்லை என்றாயே ........

அடிக்கடி நீதான் என் முதலும் முடிவுமான உறவென்றாயே .......

நானுன்னை அழைக்கும் கணமெல்லாம் அலுவல் என்றாயே .......


ஒவ்வொருமுறை எனைப் பிரிகையிலும் வலிக்கிறது என்றாயே ........

நம் முதல் சந்திப்பில் கரம்பற்றிக் கொள்ளவா என்று வினவினாயே .......


எனக்கு  முத்தமிட்ட பொழுது இதுதான் உ ன் முதல் முத்தம் என்றாயே ......

விரல் படுகையில் முதன் முறை ஒரு பெண்ணுடனான தீண்டல் என்றாயே ......

இவை யாவும் பொய்தானா ?

சில நாட்களில் உன் காதலும் பொய்க்குமோ ?










January 3, 2013

ஓவியன் !!!


நிமிர்ந்து நிற்கும் மலர்கள் வான் நோக்க தலைகுனிந்து மண்நோக்கும்

குவளை மலரிடமிருந்து ஊதா வண்ணம் குழைத்துக் கொண்டான் !

நிறைந்து நிற்கும் விண்மீன்கள் நிலவுக்குத் துணை செல்ல தனித்திருக்கும்

இரவுவானிடமிருந்து கருநீல வண்ணம் இரவல் வாங்கிக் கொண்டான் !

விரைந்து வரும் அலைகள் நுரைகளோடு கைகோத்துக் கொள்ள பரந்திருக்கும்

கடலிடமிருந்து நீல வண்ணம் கடன் வாங்கிக் கொண்டான் !

விடியப் போகும் வேளையில் மரங்கள் பனிப்போர்த்தியிருக்க விழித்திருக்கும்

பசும்புல்லிடமிருந்து பச்சை வண்ணம் பறித்துக் கொண்டான் !

தலை நிறைக்கும்  பூக்களின் நடுவே தரை நிறைத்துக் கொண்டிருக்கும்

கொன்றைப்பூவிடமிருந்து மஞ்சள் வண்ணம் கொள்ளைக் கொண்டான் !

இரவு முடிய காத்திருக்கும் பகலுக்கு முகம் மறைத்து பிரிவு சொல்லும்

அந்தி நேர சூரியனிடமிருந்து செம்மஞ்சள் வண்ணம்  அள்ளிக் கொண்டான் !

உலகம் காண கண்ணும் சுவாசிக்க நாசியும் திறந்துக் கொள்ள குழந்தையின்

திறவாக் கரங்களிலிருந்து சிவப்பு வண்ணம் திருடிக் கொண்டான் !

களவாடிய வண்ணங்கள் கொண்டு மழைத் தூரிகையால்

வானச் சுவரில் வரைந்து விட்டான் வானவில் ஓவியம் !

ஓவியன் மட்டும்  ஒளிந்துக் கொண்டான் !!!