December 17, 2012

அசைவ விரும்பி !!!


உன்னுடன் நான் நடக்க என்னை நனைக்க நினைக்கும் விழாமழைத்துளிகள் !
உன்னுடன் கனவில் நானுறங்கையில் வரும் விழிக்கத்தோன்றா விடியல்கள் !
உன்னுடைய காதல் சொல்ல அடிக்கடி நீ கொய்து தரும் சாலையோர மலர்கள் !
உன்னுடைய இடம் நோக்கி விரைகையில் விசையுடன் தொலையும் திசைகள் !
என சைவக் காதல் புரிந்து கொண்டிருந்தோம் முன்னாளில் ......

உன்னுடைய சட்டையணிந்து பார்க்கையில் மனதிற்குள் நம் தீண்டிகொள்ளுமுடல்கள் !
உன்னுடன் பனிக்கூழ் பகிர்ந்துகொள்ளும் பொழுது  மறைமுகமாகும் இதழ்தொடுகைகள் !
உன்னுடன் குளிரூட்டப்பட்ட பேருந்தில் செல்கையில் வெப்பமாய் நம் பார்வையுரசல்கள் !
உன்னுடைய இரவு நேர அழைப்பின் பொழுது காதடைத்துக் கொள்ளும் என்னறைக் கதவுகள் !
என அசைவமாகிவிட்டது அனைத்தும் இந்நாளில் ......
நானும் அசைவ விரும்பியாய் மாறிவிட்டேன் !!!



December 12, 2012

நூறாவது கவிதை !!!

100 வயது கடந்தாலும் காதலித்தே களைத்திடுவேன் !
100 வண்ணங்கள்  குழைத்து நம் காதலை வரைந்திடுவேன் !
100 பிறவிகள் உண்டெனிலும்உன்னுடனே வாழ்ந்திடுவேன் !
100 மைல்கள் அப்பாலிருப்பினும் அன்பாலே நெருங்கிடுவேன் !
100 பகல்கள் உன்னோடு இரவுகள் எதிர்பார்த்து விழித்திருப்பேன் !
100 முறை ஊடிக் கொண்டாலும் முத்தமிட்டே இணைந்திடுவேன் !
100 இரவுகள் உன்னோடு விடியலை வெறுத்து உறங்கியிருப்பேன் !
100 கடிதங்கள் பரிமாறிக் கொண்டாலும் அனைத்திலும் பொழிந்திடுவேன் !
100 சதவிகித காதலையும் உனக்களித்துவிட்டு காதலின்றி திண்டாடுவேன் !
100 குறுஞ்செய்திகள் தொடுத்தாலும் உன் அலைபேசிக்கே அனுப்பிடுவேன் !
100 கனவுகள் கண்டாலும் ஒவ்வொன்றிலும் உன்னோடு பிணைந்திருப்பேன்  !
100 கவிதைகள் எழுதினாலும் அதில் நம் சிநேகத்தை மட்டுமே கிறுக்கிடுவேன் !
100 வினாடிகள் பிரிந்திருந்தாலும் யுகமாய் நினைத்து காதலிக்க காத்திருப்பேன் !
100 முறை நான் உன்னை கோபித்தாலும் உன் ஒற்றை முத்தத்தில் சாய்ந்திடுவேன் !
100 முத்தங்கள் கொடுத்து உன் நினைவில் தினமிரவு தலையணையை இம்சிப்பேன் !
100 விண்மீன்கள் விழித்திருக்கையில் போர்வைக்குள் உன்னுடன் பதுங்கியிருப்பேன் !
100 விஷயங்கள் ஒரு நாளுக்குள் நடப்பினும் அனைத்தையும் உன்னோடு பகிர்ந்திடுவேன் !
100 வருடங்கள் உன்னுடன் வாழ்ந்திருந்து காலத்தையும் பொறாமை கொள்ளச் செய்வேன் !

November 24, 2012

நெகிழி !!!

உன்னருகில் கொஞ்சம் துரிதமாயும்
உன்பிரிவில் கொஞ்சம் மிதமாயும்
வேகம் மாறித் துடித்து நெகிழியாகிப் போனதென் இதயம் !
உனை  ரசிக்கையில் கொஞ்சம் அகலமாயும்
உனை முறைக்கையில் கொஞ்சம் குறுகலாயும்
விரிந்து சுருங்கி நெகிழியாகிப் போனதென் இமைகள் !
உன் கூடல்களில் கொஞ்சம் வெப்பமாயும்
உன் ஊடல்களில் கொஞ்சம் குளிர்ந்தும்
வெந்து தணிந்து நெகிழியாகிப் போனதென் தேகம் !
நெகிழிகளின் பயன்பாட்டை வெளியே எதிர்க்கிறேன்
ஆனால் என்னுள்ளே வளர்க்கிறேன் !!!

November 2, 2012

மனோரஞ்சிதம் !

என்றும் மாறாத இளமையுடன் நாளும் பெருகிவரும் நம் ப்ரியம் நித்யகல்யாணி !

காதல் கொண்ட உன் பார்வை ஞாயிறை பார்த்ததும் பூக்கும் என் உள்ளம் தாமரை !

நீ காதல் புரிகையில் சிவந்துவிடும் ஐம்புலனும் இதழைந்து கொண்ட செம்பருத்தி !

என் இரவு நேரங்களை சுகந்தம் கொள்ளச் செய்யும் உன் ஸ்பரிசமோ பவள மல்லி !

எவ்விதம் நான் துயருற்றாலும் எனை ஆற்றித் தேற்றும் உன் புன்னகை தும்பைப் பூ !

சேர்த்து அணைக்கையில் நீ, தனக்குள் பனித்துளியை ஒளித்துக் கொள்ளும் பன்னீர்ப் பூ !

உன் முகம் மறைந்ததும் வாடும் நான், சூரியன் மறைந்ததும் தலைகுனியும் சூரியகாந்தி !

உன் வருகை என்னும் பொழுதே என் கன்னம் வந்து குடியேறும் நாணமோ செண்பகப் பூ !

தினம் நம் கூடல் நினைத்து அந்தியில் மலர்ந்துவிடும் என் பெண்மையோ அந்திமந்தாரை !

நாள்தோறும் உன்னுடன் அளவளாவ உதவும் விண்மீன், தோட்டத்தில் உதிரும் மல்லிகை !

பொழுது சாயும் வேளை எனை வந்தாட்கொள்ளும் உன் ஞாபகம், மறைக்க முடியா தாழம்பூ !

நம் காதல் வளரும் விதமோ மரத்தை நீங்கியும் வாசம் கூடிக் கொண்டே போகும் மகிழம்பூ !

நம் சிநேகம் உதித்த நாள் கணக்கை எண்ணினால் இருமுறை மலர்ந்திருக்கும் குறிஞ்சிப் பூ !

நிலவிநூடே உனை காண ஏங்கும் என் இதயம், நிலாக் கிரணங்களுக்கு காத்திருக்கும் அல்லி !

நம்முறவு மறுபடியும் துளிர்க்கையில் செடிக்கெல்லாம் வண்ணம் பூசியிருந்தது மார்கழிப் பூ !

ஒரு நாளும் நீங்காமல் மனதில் பிரவேசித்து எனைப் பித்தாக்கும் நீதான் என் மனோரஞ்சிதம் !



October 28, 2012

மின்சாரக் காதல் !


நம் காதல் மின்சாரமானால் .................

ஒருவாரப் பிரிவு நீங்கி சந்திக்கையில் எனை உயிர்பெறச் செய்யும் உன்

அனிச்சைப் புன்னகைதான் மின்மாற்றி !

இமைக்காமல் எனை நோக்கி நொடிப்பொழுதுகளில் என் வார்த்தைகளை 


நிறுத்தும் உன் கண்கள்தான் மின்தடையம் !

விலகாமல் என் விரல்பிடித்து கணப்பொழுதுகளில் என் காதல் பெருகச் 

செய்யும் உன் விரல்கள்தான் மின்தூண்டி !

தற்செயலாய்த் தீண்டிக் கொண்டாலும் உயிரைத் தொடும் வேகத்தில் 

நரம்புகளுக்குள் செல்வதுதான் மின்னோட்டம் !

உனைக் காணாத நாளிலும் உனைப் பற்றிய நினைவுகளை நிறைத்து 

வைத்திருக்கும் என் இதயம்தான் மின்தேக்கி !

மனமுடைந்த பொழுதுகளில் ஆறுதலாய் உன் நெற்றிமுத்தம் எதிர்பார்க்கும் 

என் மனம் சந்திப்பதுதான் மின்னழுத்தம் !

தூரத்தில் இருக்கும் பொழுதிலும் தூக்கமில்லா இரவிலும் உன்னோடு 

இணைக்கும் என் அலைபேசிதான் மின்கடத்தி !



October 11, 2012

கடற்கரை குமளி !!!

கடல்மகள் ஏவாளாய் மாறி உனக்களித்த குமளியோ.. ?
நுரைகள் உணர்த்துவது அவளது அலை முத்தத்தின் ஈரமோ ..?
கடந்து வந்த பாதையை நீ காண மணலும் சுமந்து வந்தாளோ .. ?
நானில்லாத நேரம் உன்னுடன் களவுக்காதல் புரிவது முறையோ .. ?
சுவைத்த பக்கம் நானறியக் கூடாதென்று மறுபக்கத்தை பதித்தாயோ ..?
உன் காதலி நானென்று தெரிந்திருந்தும் உனக்கு பரிசளிப்பது நியாயமோ .. ?
என கேள்விகளால் துடித்து போகிறதென் மனம் இந்த புகைப்படம் கண்டவுடன் 
ஆனாலும் கடலை வெறுப்பதில்லை நம் காதலை தொடக்கி வைத்த காரணத்தால் ..



August 26, 2012

மொழிவிலக்கு !!!


உன் தவறுகளை நான் தடுப்பதில்லை ....
நீ பாவமாய் உதிர்க்கும் "Sorry"களை நேசிக்கிறேன் !!!
உடனடியாய் உனக்கொன்றுமே தருவதில்லை ....
நீ கெஞ்சலாய் கேட்கும் "Pleaseகளை விரும்புகிறேன் !!!
உனைப் பிரிகையில் பெரிதாய் வருத்தமில்லை .....
நீ உருக்கமாய் சொல்லும் "Miss You"களை காதலிக்கிறேன் !!!
தனிமை இரவுகளிலும் நான் தனித்திருப்பதில்லை .....
நீ இறுதியாய் அனுப்பும் "Good night " களை சேமிக்கிறேன் !!!
ஆங்கிலத்தின் மீது கோபமுமில்லை .....
இனிக்கத் தொடங்கியிருக்கிறது உன்னால் !!!


August 14, 2012

நிழல்படம்

பிரிந்து விட்ட காதலர்களை நினைத்துப் பார்க்கிறது 
பிணைத்து வைத்த கற்பலகை !
வலமிடமாய் கடக்கும் உயிர்வாழிகளை கண்டு நகைக்கிறது
குறுக்கும் நெடுக்குமாய் அடுக்கப்பட்ட தண்டவாள கற்கள் !
காலத்தின் கரம்கொண்டு ஓடு விலக்கி வானம்  வெறிக்கிறது  
வெயிலிலும் மழையிலும் இருளில் வாடிய கட்டிடம் !
ஆளில்லா நேரங்களின் அமைதியை ரசிக்கிறது 
நெரிசல் விரும்பிகளின் அருகே வசிக்கும் நடைபாதை !
அந்த நிமிடமும் வந்திடாதோ என எதிர்பார்த்து காத்திருக்கிறது 
கவனிப்பாரற்று துருவேறி நிற்கும் விளக்கு கம்பம் !
நீ எடுத்த நிழல் படமாதலால் உனைப் போலவே இருக்கிறது
          என்னால் புரிந்து கொள்ள இயலாததாய் !!!


August 12, 2012

பதிமூன்றாம் வாழ்த்து


பதிமூன்றில் தொடங்கி முடிந்த டீன்ஏஜ் இருபத்திமூன்றில் மீண்டும் உன்னால் தொடங்கியது

பதிமூன்றாம் வயதில் உன்னைப் பார்த்திருந்தால் இந்நேரம் காதலின் வயது பத்தைக் 
கடந்திருக்கும் 

பதிமூன்று அதிர்ஷ்டம் குறைவான எண்ணாம், ஆம் உன் பிறந்த நாளை ஒருநாளில் 
தவறவிட்டாதே

பதிமூன்று மணி பகலில் உன்னுடன் கடற்கரையில் காதல்புரியும் எண்ணமும் என்னைக் 
கைவிடவில்லை 

பதிமூன்றாம் பிறையையும் ரசிக்க நாமுண்டு என நினைத்து காத்திருக்கும் நிலவும் 
உன்போல் கறையற்றில்லை

பதிமூன்று வருடங்கள் பின்சென்று நாம் பிரிந்த நாளை நினைத்து மார்ச்சின்

பதிமூன்றாம் நாள் வாழ்த்துகிறேன் ! இனி நமக்குப் பிரிவில்லைஎன !!!!!!!!



பன்னிரெண்டாம் வாழ்த்து

பன்னிரண்டு வருடமாய் மலராத என்னை வெட்கமுதிர்க்கும் செடியாய் மாற்றினாய்

பன்னிரண்டு ஆண்டு கடந்த என் பெண்மையின் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாய் 

பன்னிரு கரங்கள் இருந்தால் உன் ஆறரிவையும் அணைக்கலாமே என்று எண்ணச் செய்தாய் 

பன்னிரண்டாம் வாரம் கருவில் விரல்மூடக் கற்றேன் நீயே விரல்கோக்க கற்பித்தாய் 

பனிரெண்டாம் மாதம் நிகழ்ந்த சந்திப்பில் காதல் நோயொன்று தொற்றிச் சென்றாய் 

பனிரெண்டாம் நூற்றாண்டில் பார்கண்ட காற்றாலையாய் என்னுள் மின்சாரம் பாய்ச்சினாய் 

பன்னிரு மாதங்கள் தாண்டி காதலிக்க  சில மாதம் வேண்டுமெனத் தோன்றச் செய்தாய் 

பன்னிரு ராசிகளும் உனக்கே ஒத்துழைத்து உன்னை உயர்த்த வாழ்த்துகிறேன் மார்ச்சின் 

பன்னிரெண்டாம் நாள் !!! நாம் காதலுற்று பிரிவற்று வாழ்ந்திருக்க !!!

பதினோராம் வாழ்த்து

பதினோராம் நாளுன்னை பிரிகையில் ஏதோ  ஓருணர்வால் படபடக்கிறது மனம் !
பதினோராம் முறை உன் ஓவியத்திற்கு முத்தமிட்டும் அடங்கவில்லைத் தாகம் !
பதினொரு மணிக்கு உன் அழைப்பு கேட்டு நாணம் சூடிக் கொள்ளும் போர்வை !
பதிநோரைந்து முற்சேர்க்கை கனக்கும் தேகம் உன் தீண்டலில் சிறகு விரிக்கும் !
பதினோராம் மாதமாகியும் உலகம்பாரா சிசுவாய் வெளிவரத் துடிக்கும் காதல் !
பதினொரு செப்டெம்பரில் நடந்
து போல் இதயம் இடித்துச் சென்றது உன் முத்தம் !
பதினொன்றின் இருவொன்றாய் நாம் வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின் !
பதினோராம் நாள் நாம் ஒன்றாய் நூற்றாண்டுகள் கடப்போமென !!!!


பத்தாம் வாழ்த்து


பத்தாம் வகுப்பு பள்ளித் தோழி உனக்களித்த கடிதம் கசக்கையில் 
                காதலியாகப் போகிறோமென உணர்ந்திருக்குமோ என் உள்மனம் 
பத்து வயதில் பள்ளி முடித்து பிரிந்த நம் நட்பு பருவமடைந்தபின் 
                காதலாய் மலருமென அறிந்திருக்குமோ நம் பள்ளிக் கதவுகள்
பத்து ரூபாய் தாளொன்றில் நம் பெயரின் முன்னெழுத்துகள் எழுதி நீ நீட்ட 
                காதலிக்கு நீ தரும் பரிசென புரிந்திருக்குமோ அக்காகிதத்திற்கு
பத்து நிமிடம் நீடிக்கும் நம் ஊடல் முடிந்ததும் மூச்சுமுட்ட நீ முத்தமிட 
                காதலர்களென கண்பொத்திக்கொள்ளுமோ நம்மறை விளக்குகள் 
பத்து முறை இதழ் முத்தமிட்டால் பத்து வருடம் நீளும் ஆயுளெனின்
                காதலில் திளைத்துக் கிடந்தே முடிவிலியாகிப் போகுமோ நம்மாயுள்
பத்திலிருக்கும் சுழியமாய் உன் துயர் நீங்க வாழ்த்துகிறேன் பத்தாம் நாள் 
                காதல் கொண்டு நாம் வானை அளப்போமென !!!!!!!!

ஒன்பதாம் வாழ்த்து



ஒன்பதுத் திங்கள் வித்தியாசம் நமக்குள் , நான் ஜனித்ததும் கருவில் நீ உருக்கொண்டாயோ ?

ஒன்பதாம் வகுப்பு முதல் என்னுள் எழும் ஹார்மோன்களின் கேள்விகளுக்கு 

விடை நீதானோ  ?

ஒன்பதில் எட்டுப்பகுதி மூழ்கிக் கிடக்கும் பனிக்கட்டியாய் என் காதலின் ஆழம் நீ அறிவாயோ ? 

ஒன்பது மாதம் என் இருள்சூழ் கருவறையில் சிறையிருக்கப் போவது 

உன்னுயிர்த் துளிதானோ  ?

ஒன்பதாம் கோளாய் இருந்த நான் வீழ்ந்தின்று செயற்கைகோளாய் உனைச் சுற்றுவதேனோ  ?

ஒன்பது துவாரங்களில் செவியிரண்டு மட்டும் உன் குரல் ரசித்திருக்க 

என்னத்தவம் நோற்றதோ ?

தொண்ணூறு ஆண்டுகளானாலும் தோல்வியின்றி வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின் 

ஒன்பதாம் நாள் !! நாம் ஓராயிரம் ஆண்டுகள் பிணைந்திருப்போமென !!!!!!!!!


எட்டாம் வாழ்த்து


எட்டாவதாய் வாரத்தில் நாளொன்று வேண்டும் உன்னுடன் நானிருக்க

எட்டு கோள்களிலும் தனியொருவீடு வேண்டும் உன்னுடன் நான் வசிக்க

எட்டுத் திக்கிலும் கடற்கரைமணல் வேண்டும் உன்னுடன் நான் நடக்க

எட்டுமணி நேர இடைவேளை வேண்டும் உன்னுடன் தேநீர் நான் சுவைக்க

எண்ணிரண்டு மணிகள் நீளும் இரவு வேண்டும் உன்னுடன் நான் புணர

எட்டாவது அதிசயமாய் இமைக்காத இமைவேண்டும் உனை நான் ரசிக்க

எட்டில் ஒருபங்கான உன்தலை என்வசம் வேண்டும் என் மடி சாய்ந்திருக்க

எட்டித்தொடமுடியா உயரம் நீயடைய வாழ்த்துகிறேன் மார்ச்சின்

எட்டாம் நாள் !!! நாம் எப்பிறப்பிலும் ஒன்றாய் உயிர்த்திருப்போமென்று !!!

ஏழாம் வாழ்த்து


ஏழு கடல் தாண்டி வந்து மணப்பான் எவனோ என சிறு வயதில் கனவுகள் காணுவேன்

ஏழு மணியளவில் கடற்கரையில் நீயிட்ட ஒற்றை முத்தத்தில் நீதான் என்றானாய் !

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டுமென்று வேண்டப் போவதில்லை நான்

ஏழு நாள் வாழ்ந்தாலும் உன்னுடன்தான் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன் !

ஏழு நூறு கோடி உலக மக்கள் தொகையில் நான் தேடிய உறவெல்லாம்

ஏழு வண்ண வானவில்லாய் உன்னுருவில் என் கண்முன் காண்கிறேன் !

ஏழாம் மாதம் பிறந்த என்னுள் நாணம் பிறப்பித்த உன்னை மார்ச்சின்

ஏழாம் நாள் வாழ்த்துகிறேன் என்றென்றும் நாம் இணைபிரியாமலிருக்க !!!!!!

ஆறாம் வாழ்த்து


ஆறாம் விரலாய் உன் விரல் பிடித்துக் கொண்டு நடந்தபொழுது வந்ததே தவிர

ஆறாம் அறிவைக் கேட்டுக் கொண்டு வரவில்லை என் காதல் !

ஆறுபிறவி முடிந்திருந்தாலும் உன்னோடு நான் சிநேகிக்கும் விதத்தில் -தோன்றும்

ஆறிலும் நானே உன் துணையாய் இருந்திருக்கக் கூடும் என்று !

ஆறேழு முறை உன்னோடு நிலவும் வானும் ரசித்திருந்தாலும் -வருடம்

ஆறு சென்றபின் நம்வீட்டு நிலாமுற்றத்தில் உன் முத்தம் பெற ஏங்கியிருப்பேன் !

ஆறு மணிக்கெல்லாம் உனது அழைப்பொழிக் கேட்டு விழித்துக் கொள்ளும் என் இதயம்

ஆறு நிமிட உரையாடலுக்குப் பின்னும் உன் அருகாமைக் கேட்டுக் கெஞ்சும் !

அறுபது தாண்டினாலும் நரைத் தொட்டாலும் ஆறாக்காதலுடன் நாமிருக்க மார்ச்சின்

ஆறாம் நாள் வாழ்த்துகிறேன் நெடுங்காலம் நாம் நெருங்கியிருக்க !!!!!!

ஐந்தாம் வாழ்த்து


ஐந்தாம் வகுப்போடு முடிந்த நம் பள்ளிப் பயணத்தின் நினைவுகள் இன்னும் வண்ணத்தோடு

ஐந்தறிவுகள் போதும் நீ என் வசமெனில் என கனவு வளர்த்துக்கொள்கிறேன் திண்ணத்தோடு

ஐந்திணைகளில் கூடலும் கூடல் நிமித்தமுமான குறிஞ்சி மட்டும் நம்  எண்ணத்தோடு

ஐம்பூதங்களில் ஒன்றானாலும் காற்றுக்கு கூட இடமில்லை நம்மிடையான உறவில்

ஐந்திலக்கணம் கொண்டுலாவும் தமிழினும் இனியதாகும் பார்வைகள் உன் விழியில்

ஐவிரல் கோத்து ஆதரவாய்த் தோள் சேர்த்து துயர்கள் துடைத்திடுவாய் உன் பரிவில்

ஐம்பொறிகளும் அணைக்கத் துடிக்கும் காதலனாக பரிணாம வளர்ச்சி அடைந்த நண்பனே

ஐந்தடி என்னை காதலால் ஆட்கொண்டு விட்ட நீ நீடூழி வாழ்கவென மார்ச்சின்

ஐந்தாம் நாள் வாழ்த்துகிறேன் நாம் என்றென்றும் கலந்திருக்க !!!!!

நான்காம் வாழ்த்து


நான்காம் நாள் இணைவு ஒரு அத்தியாயமாய் தொடங்கியது

நான்காம் சாமம் தொடர்ந்த அந்த இரவின் இளமை அன்றே விளங்கியது

நான்கு திசைகளும் காதல் ராகம் இசைத்துக் கொண்டு நம்மை ரசித்திருந்தது

நான்கு புலன்களும் ஓய்வெடுக்க நமதிருவரின் விழிகள் மட்டும் உரசியிருந்தது

நான்கு அறைகள் கொண்ட இதயத்தில் ஐந்தாவதாய் ஒரு காதல் அறை திறந்திருந்தது

நான்கு மாத பிள்ளையாய் என் பெண்மை உன் இடைதொடலில் திமிறிக் கொண்டிருந்தது

நான்கு மணியானதும் உன் வாலிபம் உன்னை விரட்ட நம் நட்போ அதைத் தடுத்திருந்தது

நான்கு முறை தனியாய்க் கைசேர்த்து நடந்ததில் காற்றிலும் கூட மின்சாரம் பாய்ந்திருந்தது

நான்கு பாதங்களும் பதித்திருந்த சுவடுகளில் வீதிகளும் விழாக்கோலம் கண்டிருந்தது

நான்கு எழுத்து காதலனாய் இந்தக் காதலியோடு என்றும் கனவுகளில் கூட 

பிரியாமல் காதலித்திருக்க 

மார்ச்சின் நான்காம் நாள் வாழ்த்துகிறேன் !!!

மூன்றாம் வாழ்த்து


மூன்றாம் நாளும் நான் சாகரம் விரும்ப நீயோ சிகரமிட்டுச் சென்றாய்

மூன்று உலகமாய்த் தோன்றும் உனையே எனக்குத் தரச்சொல்லி

மூன்று கடவுளரில் ஒருவரைக் கண்டு வேண்டிக்கொண்டேன்

மூவேழு நிமிடங்கள் தாமதமாய் வந்த பேருந்தில் முண்டியடித்து நிற்பினும்

மூவெட்டு நிரம்பிய உன் குறுந்தாடி கைப்பட்டு வானுலவுவதாய் எண்ணம்

மூன்றாம் சந்திப்பின் முடிவில் எனக்குள் காதல்குழந்தை கருவுறத் தொடங்கியது

மூன்று மணி நேரம் நான் உன்னுடன் வாழ்ந்த நிமிடங்கள் போல

முப்பொழுதும் நம் உறவு முடியாமல் நீண்டிருக்க மார்ச்சின்

மூன்றாம் நாள் வாழ்த்துகிறேன் !

இரண்டாம் வாழ்த்து


இரண்டாம் நாளும் நம் வருகையை எதிர்பார்த்திருந்த கடற்கரைக்கு

இரண்டு கரங்களாலும் என்னைப் பற்றி நாம் காதலர்களென தெரிவித்தாய் ...

இரண்டு பேரையும் அனிச்சையாய் வீழ்த்திய அந்த கடலலைக்கு

இரண்டு நொடியில்அணைத்து தாழ்கையிலும் பிரிவில்லையென உணர்த்தினாய் ...

இரண்டு விழியாலும் அளந்தவண்ணம் நீ என் அருகிலிருக்கையில்

இறந்திறந்து உயிர்க்கிறது என் நாணம் !!!

இருவரும் இணைந்திருக்க உன்னை தருவித்த மார்ச்சின்

இரண்டாம் நாள் வாழ்த்துகிறேன் !!!

இரண்டுவரிக் கவிதையாய் எப்பொழுதும் இணைந்திருப்போமென !!!

முதல் வாழ்த்து


எனக்கே எனக்காக உன்னை இந்த உலகுக்கு ஈன்ற மார்ச் மாதத்தின்

ஒன்றாம் நாளே உனக்கு மின்வழி அனுப்புகிறேன்

என் ஆசை முத்தங்களை சுமந்து வரும் இந்த முதல்வாழ்த்து உனக்கே உனக்காக.. !!!

ஒன்றாம் வகுப்பில் நாம் இணைந்திருந்த ஞாபகம் இன்னும் என்னில் அழியாமல் ....

ஒன்றாய் நடக்கையில் உன் கரம் உரசி பற்றிக்கொள்ளும் தீ என்னில் அணையாமல் ....

ஒன்றாய் இருந்த அன்றிரவு நாம் அருந்திய தேநீரின் சுவை என்னில் மறையாமல் ...

ஒன்றாய் இதழ்முத்தம் பழக வாய்ப்பளித்த கடற்கரையின் சாரல் என்னில் விலகாமல் ...

நீ நடும் செடியெல்லாம் விருட்சமாகும் என்றனையே ... அதனால்தான்

நீ என் மனம் விதைத்து போன காதலும் விண்முட்டியதோ ?

உன்னை எனக்களித்த மார்ச் மாதத்திற்கு என் வாழ்த்துக்கள் !

June 30, 2012

பிறந்தநாள் பரிசு !!!

ஜில்லென்ற காற்றில் காதோரம் தவழும் கற்றைமுடி ஒதுக்கி
எனக்கு மட்டும் கேட்கும்படி நீயுரைக்கும் " ஐ லவ் யூ " வேண்டும்!!!
சூடான கடற்கரைமணலில் நிழல் தேடி அருகருகே அமர்ந்து
கரங்கள் பற்றி விழிகள் பார்த்து நீவிளிக்கும் என்பெயர் வேண்டும்!!!
லேசான தூரலில் மரங்களடர்ந்த சாலையில் ஒற்றைக் குடைக்குள்
விரல்களுக்குள் புதைந்து வெப்பமூட்டும் உன் விரல்கள் வேண்டும்!!!
முடியாத பகலும் தொடங்காத இரவும் இணையும் தருணமதில்
என் மடி சாய்ந்து நீயிருக்க நானுன் தலை கோதும் கணம் வேண்டும்!!!
என என் ஆசைகள் விரிந்து கொண்டே போனாலும்
உன் பிறந்தநாளுக்கு நான் என்ன செய்யவென்று எனையே கேட்கும்
நீதானடா எனக்கு கிடைத்த விலையில்லா பரிசு !!!


June 27, 2012

அதிகாலைக் கனவு !!!

அரைத் தூக்கத்தில் எழுந்து
ஆசை முத்தமொன்று நெற்றியில் இட்டு
இனிப்பாய் நான் கொடுக்கும் தேநீர் சுவைத்து
ஈர இதழ்களால் என் கன்னம் தொட்டு
உன் மார்போடு என்னை இழுத்து
ஊமையாகிப் போன என் இதழ் ருசித்து
எண்ணில்லா கதை பேசும் என் விழி பார்த்து
ஏக்கமாய் ஒரு பார்வை வீசி
ஐம்புலனும் சிலிர்க்க
ஒருமுறை அணைக்கிறாய் !!!!!
ஓயாமல் அலறும் அலாரம் அணைக்கிறேன் நான்
அடடா !!! அதிகாலைக் கனவு !!!

June 14, 2012

நம் வீட்டு நிலாமுற்றம் !


நிலவை ரசிக்க வேண்டிய நம் காதலை நிலவே ரசிக்கும் ஒரு விசித்திரம் ...
நானும் நீயும் இதழ் முத்தம் பரிமாறிக் கொள்ள அரையிருளாய் ஒரு இடம் ...
இரவு வரை நான் சேமித்து வைத்த பிரியத்தை சொல்ல அழகாய் ஒரு தருணம் ....
ஒரே நேரத்தில் இரு நிலாக்கள் காணும் வாய்ப்பு , அருகில் நீ தொலைவில் நிலா ....
விண்மீன்கள் நிரம்பி வழியும் வானத்திற்கு நம் வீட்டில் உறங்கிக் கொள்ள ஒரு வரம் ...


May 28, 2012

தற்காலிகப் பிரிவு !!!

நீ அமர்ந்து சென்ற நாற்காலியில்
நாள் முழுதும் அமர்ந்து கனா காண்கிறேன்
உன் மடி சேர்ந்ததாய் எண்ணிக் கொண்டு .....
நீ தீண்டிச் சென்ற இடமெல்லாம்
நானே தீண்டி உணர்விழக்கிறேன்
உன் விரலென்னைத் தொடுவதாய் நினைத்து .....
நீ அனிச்சையாய் நிற்கையில்
நான் பதித்துக் கொண்ட உன் நிழல்படம்
கண்டு நீயென்னை பார்ப்பதாய் நாணுகிறேன் ..... இவ்வாறு
இடையிடையே வரும் பிரிவுகள் உன்னை ஏனோ
இடைவிடாமல் நேசிக்கக் கற்பிக்கறது...

May 22, 2012

விந்தைக் காதல் !!!

ஒரு மாதப் பிரிவைக் கூட
ஒற்றை முத்தம் நெற்றியிலிட்டு
சுகமாய் மாற்றும் வித்தை எங்கு கற்றாயோ ?
இருநொடிப் பிரிந்தால் கூட உன்
இரு விழிகளின் காதல் காணமல்
நான் உருக என்ன மாயம் செய்தாயோ ?

May 8, 2012

வளையல் !

பெயர் சூட்டுகையில் முதன் முதலில் அம்மா அணிவித்த வளையல் !
பள்ளிக் காலத்தில் அழகாய் வட்டம் வரைய உதவிய வளையல் !
உடைந்தாலும் வண்ணங்கள் சேர்த்து விளையாட உதவிய வளையல் !
வாசல் கடக்கும் தோழிக்கு கையசைக்கையில் சிரித்த வளையல் !
வயதடைந்ததும் ஆசையாய் அத்தைப் பரிசாகக் கொடுத்த வளையல் !
வேலையில்லா பொழுதுகளில் பம்பரமாய் சுற்ற பயன்பட்ட வளையல் !
என எண்ணிலங்கா காலங்கள் வளையலோடு வாழ்ந்திருந்தாலும்
நீ என் கரம் பற்றியதும் வளையலாகிப் போன உன் விரல்கள் மட்டும்
ஏனோ என் வளைக்கரம் கடந்து உயிர் துளைத்துச் சென்றது !!!



April 23, 2012

உணராக் காதல் !

உன் அலைபேசிக்கு அழைக்கும் பொழுது
அனைத்துத் தடங்களும் உபயோகத்தில் இருக்கிறதென்றால்
அனைத்து செல்களிலும் துயரம் வந்துத் தொற்றிக் கொள்ளும் !
உன் கைபேசி எண்ணை தட்டும் பொழுது
அணைத்து வைக்கப்படிருக்கிறது என்றால் உன் நினைவில்
அணைத்துக் கொள்வேன் என் கைபேசியை !
உன் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ள நினைத்து
தவறான எண்ணுக்கு அழைத்துவிட்டால்
தவறாக அழுத்திய விரல்களைக் கோபிப்பேன் !
என் காதலை என் கைபேசி உணர்ந்த அளவேனும்
நீ உணர்வாயோ ?

April 14, 2012

முதல் நாளின்று !!!

உன் குரல் கேளாமல் ,
உன்னோடு சிற்றூடல் கொள்ளாமல்,
உனக்கு அலைவழி செய்திகள் அனுப்பாமல் ,
உன் எண்ணை விசைப் பலகையில் அழுத்தாமல்,
இந்த நாளொன்று நழுவிட
நானோ முன்னை விட உன்னை வெகுவாய் விரும்புகிறேன் !!!

April 4, 2012

உன்னருகில் !!!


பக்கம் பக்கமாய் கவிதைகள் உமிழும் மனம்
பக்கம் நீயிருக்கையில் அக்கம்பக்கம் மறக்கும்
பொறிகளின் வேகம் மிஞ்சும் மூளை உன்னருகில்
பொறிகளைந்தும் திசைவேறாய்ச் சிதறச் செய்யும்
வலம் தவறி இடமிருக்கும் இதயம் உன்னை
வலம் வந்து துடிப்புகள் தவற விடும்
பிழையின்றி உதிரும் சொற்கள் உன்னெதிர் தோற்று
பிழைக்க இடம் தேடி மீண்டும் வளை புகும்
விடையில்லா வினாவெல்லாம் உன் விழிவீச்சில்
விடைப் பெற்றுத் தொலையும் !!!

April 1, 2012

கோபம் !!!

உன் பயணப்பையின் மீது ஆராக் கோபம்
எப்பொழுதும் உன் தோள்களில் தொற்றிக் கொள்கிறதே !!!
உன் மடிக்கணினியின் மீது பொய்க் கோபம்
எந்நேரமும் என்னிடங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறதே !!!
உன் கைப்பேசியின் மீது தீராக் கோபம்
எனக்கான உன் முத்தங்களை முதலில் சுவைக்கிறதே !!!
உன் தலையணை மீது செல்லக் கோபம்
எனைப்பற்றி தூக்கத்தில் நீ உளற ஒட்டுக் கேட்கிறதே !!!
உன் தொடுதிரையின் மீது கடுங் கோபம்
எனைவிட அதிகமாய் உன் தீண்டல் பெறுகிறதே !!!
உன் கைக்கடிகாரத்தின் மீது சிறு கோபம்
என்வசம் நீயிருக்கையில் நேரத்தை நினைவூட்டுதே !!!
ஒவ்வொருமுறை கோபிக்கும் பொழுதும் 
முத்தமொன்று நீ பரிசளிப்பதால் 
கோபத்தின் எண்ணிக்கை முடிவிலியாய் நீள்கிறது !!!



March 3, 2012

காதலர் மண்டலம் !!!

இடைவெளிவிட்டு அமர்ந்து இமைகளால் மட்டும் பேசிக் கொள்ளும் ஒரு மலரும் காதல்
மணற்பரப்பில் நடந்துக் கொண்டே இடைத் தொட்டுச் செல்லும் ஒரு உல்லாசக் காதல்
குழந்தைகள் பத்தடி சென்றதும் விரல்களால் கோலமிடும் ஒரு அனுபவக்காதல்
வெட்ட வெயிலில் குடை ராட்டினமே குடையாய் விரிய ஒரு இளமைக்காதல்
ஒளியடங்கும் நேரம் எத்தனித்து முத்தமிட்டுக் கொள்ளும் ஒரு பள்ளிக் காதல்
கடலலையில் கால்நனைத்துக் கொண்டே காதலிக்கும் ஒரு கல்லூரிக் காதல்
ஓய்வெடுக்கும் படகின் ஓரம் ஓயாமல் காதல் புரியும் ஒரு புதுமணக் காதல்
அலுவல்கள் முடிந்ததும் தழுவல்கள் தொடரும் ஒரு அலுவலகக் காதல்
சுண்டலோடு காதலியின் இதழ்களையும் சுவைக்கும் ஒரு வீரியக்காதல்
காலாற நடந்துக் கொண்டே கரங்கள்பற்றிச் செல்லும் ஒரு முதிர் காதல்
என எங்கெங்கு காணினும் காதலடா ......
காதலர் மண்டலமாய் அறிவிக்கப்பட வேண்டிய மெரினா !!!



February 28, 2012

களவுக் காதல் !!!

நாடிமானியாய் மாறி இதயத்தொனிகள் தேடும் உன் விரல்களுக்கு
தெரியாதோ இதயம் இடப்பக்கம் என்று ...
நாணுமென்னை மிச்சமின்றித் தின்று உயிர்தேடும் உன் விழிகளுக்கு
தெரியாதோ உயிர் உன்வசமென்று ....
இடைவிடாமல் தொட்டிருக்க என் குரல் எதிர்பார்க்கும் உன் செவிகளுக்கு
தெரியாதோ  உணர்கையில் நான் ஊமையென்று...
என் பெண்மையின் தண்மையெல்லாம் வெம்மையாக்கும் உன் சுவாசத்திற்கு
தெரியாதோ இடைவெளிகள் இம்சிக்குமென்று ....
முதலிரண்டு முடிந்தும் மூன்றாமுறையாய் முத்தம் கேட்கும் உன் இதழ்களுக்கு
தெரியாதோ இரவென் துயில் கெடுமென்று ....
எனதைப் போலவே உன் ஐம்புலன்களும் அறிவிலிகள் ஆயினவோ ...?

February 24, 2012

சூரியக் குடும்பம் !

புதன்
உன் அருகாமை வெய்யோனாய் உஷ்ணம் உமிழ்ந்தாலும் உனையே விழையும் நான்
வெள்ளி
நீ ரசிக்கும் நிலவுக்குப் போட்டியாய் என் வானப் பிரவேசம் மாலை நட்சத்திரமாய்
புவி
உன் கரிவளி நான் உள்ளிழுக்கும் உயிர்வளியாக வகைசெய்த வளிமண்டலம்
செவ்வாய்
தூக்கமின்றி சிவந்த பொழுதுகளிலும் அழகாய் கவிதைகள் சொல்லும் உன் விழி
வியாழன்
உன் தற்காலிக பிரிவுகளில் கற்பனைக்கெட்டா கனம்கொள்ளும் என் இதயம்
சனி
வளையமாய் என்னை வளைத்துப் பற்றும் உன் கரத்தில் சிக்கித் தடுமாறும் தேகம்
யுரேனஸ்
எனக்கு வடக்குத்தெற்காய் தோன்றுவதெல்லாம் உனது நெற்றியும் பாதமும்
நெப்ட்யூன்
வெகுதொலைவில் நீ என்றாலும் உன் நினைவுகளையே சுற்றித் திரிகிறேன்

கோளொத்த பண்புகள் உன்னிடமும் என்னிடமும் நம் காதலிடமும் ... !


February 21, 2012

மின்திறன்

வலக்கன்னம் பதித்த முத்தத்தில்
இடமிருந்த இதயம் வலமாய் கொஞ்சம் வழுக்க
இடக்கன்னமும் அடம்பிடிக்கிறது இதழ்தொடுகை கேட்டு !
பாதம்பிடித்து சிறுவிரல் தீண்டுகையில்
முதுகுத்தண்டின் முழுநீளத்திற்கு மின்திறன் தோன்ற
மின்சாரம் தேவையின்றிக் கழிகிறது மின்வெட்டுநிமிடங்கள் !
அனிச்சையாய் இடைத்தொட்ட விரலால்
இடைநிற்கும் ஆடைப்பட்டாலும் நீயாய் நினைத்து
ஏமாற்றத்தில் இடரித் தவிக்கிறது நிலைக்கொள்ளா மனது !
தேகமிருக்கும் பாகம் ஒவ்வொன்றும் உன்னினைவுகள் சொல்ல
உயிராய் இருந்த நீ இன்றென் உடலாகவும் மாறினாய் !

February 20, 2012

முன்பனிக்காலம் !!!

நிசப்தமாய் உறங்கும் வீதிகளினூடே படரும் பனிப் பிரவேசம்
    மையல் கொண்ட என் மீது படரும் உன் மோகம் !
அஸ்தமிக்கும் நிலவுக்கு வெள்ளைப் போர்வை நீட்டும் முன்பனி
      உறங்கையில் காதுவரை போர்த்தும் உன் கரங்கள் !
எழும் சூரியனோடு ஊடி அதனை ஒளிர விடாமல் செய்யும் மூடுபனி
      புணரும் முன் என்னோடு போரிடும் உன் விரல்கள் !
இரவையும் பகலையும் இணைப்பதாய் தோன்றும் சாம்பல் நிற வானம்
      எந்நேரமும் என்னாடை உற்று நோக்கும் உன் விழிநிறம் !
இடையிடையே தலையாட்டி சோம்பல் முறிக்கும் சருகுதிர்க்கா மரங்கள்
      கனவினூடே விழித்து சேர்த்துக் கொள்ளும் உன் தோள்கள் !
சிறகுகள் மூடி பறவைகளையும் சிலநேரம் துயில் நீடிக்கச் செய்யும் வானிலை
       இதமாய் என்னை அணைத்து கதகதப்பூட்டும் உன் ஸ்பரிசம் !


February 18, 2012

எனக்கான உனது பெயர் !


விளக்கம் நூறு சொன்னாலும் உன் பெயரோ
வார்த்தைகளால் வரையறுக்க இயலாதது ....
ஆனாலும் முயற்சிக்கிறேன் !
விளிப்பதற்காக உனக்கிட்டப் பெயர்தான்
என் இரவுகளை விழிப்புகளில் கரைந்திடச் செய்தது ....
விளையாட்டாய் சிறுவயதில் உன் பெயரே
எழுதுகையில் என் பெயருக்கு துணை நின்றது ...
கைப்பேசியின் பதிவுகளில் உன் பெயருக்கே
முதன் முதலில் புனைப் பெயர் கிடைத்தது ....
நான் விரல் நீட்டி அழைக்கையில் உன் பெயர்
இனிப்பதாய் காதலில் நீ உளறிக் கொட்டியது ...
கனவுகளில் உச்சரிக்கும் உன் பெயர்மட்டுமே
காலம் முழுதும் என்னோடு இணைய உகந்தது !!!

February 17, 2012

14 பெப்ரவரி


14 ஏப்ரல் பிறந்தநாள் காணும் தமிழ் வருடம் மீது கொண்டது
14 வார பிரிவிற்கு பின் தாயிட்ட முத்தத்தின் மீது கொண்டது
14 நூற்றாண்டுகள் கடந்த அப்பர் பாடல்கள் மீது கொண்டது
14 வயதில் பக்கத்துக்கு வீட்டு குட்டிநாயின் மீது கொண்டது
14 நவம்பரின் குழந்தைகள் தின பரிசில்கள் மீது கொண்டது
14 மாதத்தில் பேசிய முதல் வார்த்தையின் மீது கொண்டது
14 ஆண்டு பக்குவமாய் படித்த பள்ளியின் மீது கொண்டது
14 வருடம் வனவாசம் சென்ற ராமனின் மீது கொண்டது
14 கிராம் 5 ஸ்டார் சாக்லேட்டின் சுவை மீது கொண்டது
14 ஜனவரியில் வரும் பொங்கல் விழா மீது கொண்டது
14 மேலாண்மைக் கொள்கைகளின் மீது கொண்டது
14 மணிநேர ஞாயிறு தூக்கத்தின் மீது கொண்டது
14 நாட்களில் கரையும் நிலவின் மீது கொண்டது
என நான் கொண்ட காதல் அத்தனையும் விழுங்கி விட்டு சிரிக்கிறது
14 பெப்ரவரியன்று நீ சொன்ன அந்த " ஐ லவ் யூ "