December 20, 2013

மார்கழி ....

மார்கழி இரவில் உரசும் நம் ஸ்பரிசங்களால் வெம்மையாகும் சூழ்நிலை
சித்திரை மாத வெயிலையும் மிஞ்சுகிறது !

மார்கழி மாலையில் திணறும் என் சுவாசம்
வைகாசி முதல் நாம் ஒன்றாய் சுவாசிப்பதை நினைவூட்டுகிறது !

மார்கழி மாதத்து பனியை சுமந்திருக்கும் புல்லின் நுனி
ஆனி மாதம் நான் சுமக்க ஆரம்பித்த நம் கருவின் தூய்மை சொல்கிறது !

மார்கழியின் சற்றே வெம்மையான பகல்பொழுதுகள்
ஆடியில் நான் நீயின்றி வாடியதை உணர்த்துகிறது !

மார்கழியில் வீட்டு வாசல்களை அலங்கரிக்கும் கோலங்கள் 
ஆவணியில் நாம் சென்ற  கடற்கரையின் வண்ணமாக விரிகிறது !

மார்கழியில் குளிர்ந்திருக்கும் நீரைத் தொடும்பொழுது
புரட்டாசியில் நம்மை இணைத்துவைத்த மழைக்காலம் ஞாபகம் வருகிறது !

மார்கழி குளிரிலும் ஓயாமல் கேட்கும் கடலலைகளின் சப்தம் 
ஐப்பசியில் நம் தலை தீபாவளி பட்டாசுகள் போல் தோன்றுகிறது !

மார்கழி மாதத்து தண்மையில் நடுங்கும் தேகத்தை காக்கும் போர்வை
கார்த்திகையில்  என் பரீட்சை பயத்தை அணைத்து தேற்றிய உன் கரங்கள் !

மார்கழியும் மார்கழி குளிரும் எனக்கு புதிதில்லை ஆனால் இந்த
மார்கழி நம் காதலை வலுப்படுத்தவே உருவானதாய் எண்ணுகிறேன் !

மார்கழி அதிகாலை நேரங்களில் கோவில்களில் கேட்கும் பாடல்கள்
தை மாதத்தில் நீ  உரைத்த காதலைப் போல் தெய்வீகமாய் கேட்கிறது !

மார்கழித் திங்களில் பூக்கும் மார்கழிப்பூவின் நறுமணம்
மாசியில் சம்மதம் பெற்ற நம் காதலைப் போல் இளமையாய் இருக்கிறது !

மார்கழி மாத பனிப்படலத்தைத் தாண்டி உலகில் பிரவேசிக்கும் இளங்கதிர்
பங்குனியில் நமக்கு பிறக்கப் போகும் குழந்தையைப் போல் உதிக்கிறது !






December 10, 2013

ரசிக்கிறேன்

ஆளில்லா சாலைகளில் அடிக்கடி நடந்து சென்றோம் - காதலிக்கையில்
 
இன்றோ மக்கள் நிரம்பி வழியும் சாலையும் அரவமற்று தெரிகிறது 

நான் உன்னுடன் நடப்பதால் ....

ஒளிதீண்டா மரங்களிடையே அமர்ந்து பேசினோம் -காதல் புரிகையில் 

இன்றோ இலையுதிர்ந்த மரம் கூட நமக்காக  நிழல் விரிக்கிறது  

நான் உன்னருகில் இருக்கையில் ....

ஒருநாளில் ஒருமுறையாவது சந்திக்க நினைப்போம் - காதலில் 

இன்றோ ஒரு கணமும் உனைப் பிரிய மனம் மறுக்கிறது  

நான் உன்னில் கலந்ததால் .....

காலங்கள் விரைவாக நகர்ந்தாலும் 

காதல் மட்டும் கூடிக்கொண்டே செல்கிறது ....

அன்று உன் காதலில் திளைத்திருந்தேன்  ....

இன்றோ உன்னைக் கணவனாய் ரசிக்கிறேன் .... 

என் வாழ்வை வளமாக்கிய உன்னை என் வரமாய் 

நினைக்கிறேன் .....