February 28, 2012

களவுக் காதல் !!!

நாடிமானியாய் மாறி இதயத்தொனிகள் தேடும் உன் விரல்களுக்கு
தெரியாதோ இதயம் இடப்பக்கம் என்று ...
நாணுமென்னை மிச்சமின்றித் தின்று உயிர்தேடும் உன் விழிகளுக்கு
தெரியாதோ உயிர் உன்வசமென்று ....
இடைவிடாமல் தொட்டிருக்க என் குரல் எதிர்பார்க்கும் உன் செவிகளுக்கு
தெரியாதோ  உணர்கையில் நான் ஊமையென்று...
என் பெண்மையின் தண்மையெல்லாம் வெம்மையாக்கும் உன் சுவாசத்திற்கு
தெரியாதோ இடைவெளிகள் இம்சிக்குமென்று ....
முதலிரண்டு முடிந்தும் மூன்றாமுறையாய் முத்தம் கேட்கும் உன் இதழ்களுக்கு
தெரியாதோ இரவென் துயில் கெடுமென்று ....
எனதைப் போலவே உன் ஐம்புலன்களும் அறிவிலிகள் ஆயினவோ ...?

February 24, 2012

சூரியக் குடும்பம் !

புதன்
உன் அருகாமை வெய்யோனாய் உஷ்ணம் உமிழ்ந்தாலும் உனையே விழையும் நான்
வெள்ளி
நீ ரசிக்கும் நிலவுக்குப் போட்டியாய் என் வானப் பிரவேசம் மாலை நட்சத்திரமாய்
புவி
உன் கரிவளி நான் உள்ளிழுக்கும் உயிர்வளியாக வகைசெய்த வளிமண்டலம்
செவ்வாய்
தூக்கமின்றி சிவந்த பொழுதுகளிலும் அழகாய் கவிதைகள் சொல்லும் உன் விழி
வியாழன்
உன் தற்காலிக பிரிவுகளில் கற்பனைக்கெட்டா கனம்கொள்ளும் என் இதயம்
சனி
வளையமாய் என்னை வளைத்துப் பற்றும் உன் கரத்தில் சிக்கித் தடுமாறும் தேகம்
யுரேனஸ்
எனக்கு வடக்குத்தெற்காய் தோன்றுவதெல்லாம் உனது நெற்றியும் பாதமும்
நெப்ட்யூன்
வெகுதொலைவில் நீ என்றாலும் உன் நினைவுகளையே சுற்றித் திரிகிறேன்

கோளொத்த பண்புகள் உன்னிடமும் என்னிடமும் நம் காதலிடமும் ... !


February 21, 2012

மின்திறன்

வலக்கன்னம் பதித்த முத்தத்தில்
இடமிருந்த இதயம் வலமாய் கொஞ்சம் வழுக்க
இடக்கன்னமும் அடம்பிடிக்கிறது இதழ்தொடுகை கேட்டு !
பாதம்பிடித்து சிறுவிரல் தீண்டுகையில்
முதுகுத்தண்டின் முழுநீளத்திற்கு மின்திறன் தோன்ற
மின்சாரம் தேவையின்றிக் கழிகிறது மின்வெட்டுநிமிடங்கள் !
அனிச்சையாய் இடைத்தொட்ட விரலால்
இடைநிற்கும் ஆடைப்பட்டாலும் நீயாய் நினைத்து
ஏமாற்றத்தில் இடரித் தவிக்கிறது நிலைக்கொள்ளா மனது !
தேகமிருக்கும் பாகம் ஒவ்வொன்றும் உன்னினைவுகள் சொல்ல
உயிராய் இருந்த நீ இன்றென் உடலாகவும் மாறினாய் !

February 20, 2012

முன்பனிக்காலம் !!!

நிசப்தமாய் உறங்கும் வீதிகளினூடே படரும் பனிப் பிரவேசம்
    மையல் கொண்ட என் மீது படரும் உன் மோகம் !
அஸ்தமிக்கும் நிலவுக்கு வெள்ளைப் போர்வை நீட்டும் முன்பனி
      உறங்கையில் காதுவரை போர்த்தும் உன் கரங்கள் !
எழும் சூரியனோடு ஊடி அதனை ஒளிர விடாமல் செய்யும் மூடுபனி
      புணரும் முன் என்னோடு போரிடும் உன் விரல்கள் !
இரவையும் பகலையும் இணைப்பதாய் தோன்றும் சாம்பல் நிற வானம்
      எந்நேரமும் என்னாடை உற்று நோக்கும் உன் விழிநிறம் !
இடையிடையே தலையாட்டி சோம்பல் முறிக்கும் சருகுதிர்க்கா மரங்கள்
      கனவினூடே விழித்து சேர்த்துக் கொள்ளும் உன் தோள்கள் !
சிறகுகள் மூடி பறவைகளையும் சிலநேரம் துயில் நீடிக்கச் செய்யும் வானிலை
       இதமாய் என்னை அணைத்து கதகதப்பூட்டும் உன் ஸ்பரிசம் !


February 18, 2012

எனக்கான உனது பெயர் !


விளக்கம் நூறு சொன்னாலும் உன் பெயரோ
வார்த்தைகளால் வரையறுக்க இயலாதது ....
ஆனாலும் முயற்சிக்கிறேன் !
விளிப்பதற்காக உனக்கிட்டப் பெயர்தான்
என் இரவுகளை விழிப்புகளில் கரைந்திடச் செய்தது ....
விளையாட்டாய் சிறுவயதில் உன் பெயரே
எழுதுகையில் என் பெயருக்கு துணை நின்றது ...
கைப்பேசியின் பதிவுகளில் உன் பெயருக்கே
முதன் முதலில் புனைப் பெயர் கிடைத்தது ....
நான் விரல் நீட்டி அழைக்கையில் உன் பெயர்
இனிப்பதாய் காதலில் நீ உளறிக் கொட்டியது ...
கனவுகளில் உச்சரிக்கும் உன் பெயர்மட்டுமே
காலம் முழுதும் என்னோடு இணைய உகந்தது !!!

February 17, 2012

14 பெப்ரவரி


14 ஏப்ரல் பிறந்தநாள் காணும் தமிழ் வருடம் மீது கொண்டது
14 வார பிரிவிற்கு பின் தாயிட்ட முத்தத்தின் மீது கொண்டது
14 நூற்றாண்டுகள் கடந்த அப்பர் பாடல்கள் மீது கொண்டது
14 வயதில் பக்கத்துக்கு வீட்டு குட்டிநாயின் மீது கொண்டது
14 நவம்பரின் குழந்தைகள் தின பரிசில்கள் மீது கொண்டது
14 மாதத்தில் பேசிய முதல் வார்த்தையின் மீது கொண்டது
14 ஆண்டு பக்குவமாய் படித்த பள்ளியின் மீது கொண்டது
14 வருடம் வனவாசம் சென்ற ராமனின் மீது கொண்டது
14 கிராம் 5 ஸ்டார் சாக்லேட்டின் சுவை மீது கொண்டது
14 ஜனவரியில் வரும் பொங்கல் விழா மீது கொண்டது
14 மேலாண்மைக் கொள்கைகளின் மீது கொண்டது
14 மணிநேர ஞாயிறு தூக்கத்தின் மீது கொண்டது
14 நாட்களில் கரையும் நிலவின் மீது கொண்டது
என நான் கொண்ட காதல் அத்தனையும் விழுங்கி விட்டு சிரிக்கிறது
14 பெப்ரவரியன்று நீ சொன்ன அந்த " ஐ லவ் யூ "

February 10, 2012

அன்று அளவளாவையில்....


முகப்பூச்சு கொடுக்காத வண்ணம் உன் இதழ் கொடுத்ததென்றேன்,
தினமும் உபயோகித்தால்தான் பயன் என்கிறாய் நாணிச் சிரிக்கிறேன் ...

நிலவின்று ஏனோ இத்தனை அருகில் என்றதும் எங்கென்று நான் விழிக்க,
நீயோ என் கன்னம் தொட்டுக் காட்டுகிறாய் கிறங்கிப் போகிறேன் ...

காய்ச்சலென்றதும் பதறி உன் நெற்றித் தொட்டு இல்லையென்றேன் ,
இனி வந்துவிடும் என்கிறாய் புன்னகைத்தவாறு பூரித்துப் போகிறேன் ...

பசிக்கிறது என்றவுடன் அருகில் கடையேதும் உண்டோவென நான் தேட ,
நீயோ என் இதழ் வருடுகிறாய் நானிந்த உலகம் மறக்கிறேன் ...

February 8, 2012

காதல் கிருமி

மின்தொடர்வண்டிக்கான வரிசையில் ஆடை மட்டும் தீண்டிக் கொள்ள ,
ஜன்னலோரக் காற்று குளிர் கூட்ட உன் அருகாமையோ வெப்பமேற்ற ,
இணைந்து நடக்கையில் தற்செயலாய் விரல்கள் கொத்துச் செல்ல ,
இருள் கவ்விய மணல் பரப்பில் தாகம் தணியா தோள்களை நீ பற்ற ,
விண்மீன் நான் வெறித்திருக்க உன் இதழ்களோ என் கன்னம் தொட ,
விரல்கள் அங்கங்கு விளையாடி உணர்வு தின்று பசியாறிக் கிடக்க ,
அப்பொழுதுதான் உணர்கிறேன் காதலும் ஒரு உயிர்க் கொல்லிக் கிருமியென ...


February 7, 2012

அம்புலி உலா !


கடற்கரை மணலில் என் காலணிகளை நீ சுமக்க
நானோ உன் காதலை சுமந்து வந்தேன் !
அனுமதியின்றி பாதம் தொடும் நுரைகளை நீ வெறுக்க
அனுமதியோடு கரம் பற்றிய உன்னை நான் நேசித்தேன் !
நிலவொளியை விழுங்கும் அலைகளை நீ ரசிக்க
என் நாணம் வெளிக்கொணரும் உன்னை நான் ரசித்தேன் !
இரவெல்லாம் இருந்திருப்பேன் ஆனால்
உன் காதல் கொள்ளாமல் இதயம் திணறி விட்டேன் ! 
ஏழு நாழிகை நீண்ட நெருக்கமும் .....
ஆறாம் அறிவின் கிறக்கமும் ...
ஐம்புலன்களின் மயக்கமும்...
நால்வகை பண்புகளும் ...
மூவெட்டு அகவையும் ...
இருவரிக் கவிதையும் ...
ஒற்றைப் பூஞ்சிரிப்பும்..
உனை நீங்கியதும் ஏனோ அர்த்தம் இழந்ததடா....
பாதம் படிந்திருந்த கடற்கரை மணல் உதறிவிட்டேன் ...
என்னுள்ளத்தில் தொற்றிக் கொண்ட உன் நினைவுகளை என் செய்வேன் ...

February 4, 2012

விட்டில் காதல் !

ஐந்தில் ஆசை ஆசையாய் கட்டிய மண்வீட்டிற்கு
விளக்கு செய்வேன் மின்மினிப்பூச்சிக் கொண்டு !
ஏழில் அலை அலையாய் ஒளிபரப்பும்
விளக்கில் விரல் அசைத்து விளையாடுவேன் !
பத்தில் வித விதமாய் விரலிணைத்து
விளக்கின் ஒளியில் மின்னும் நிழல் ரசிப்பேன் !
பதிமூன்றில் கூட்டம் கூட்டமாய் உயிர்விடவென
விளக்கில்விழும் பூச்சிகள் கண்டு வருந்துவேன் !
இன்றோ வில்லை வில்லையாய் வந்து விழும்
உன் நினைவுகள் எண்ணிக் கொண்டே
விளக்கணைக்கிறேன் !!!
உன் காதலில் விழுந்து நானும் விட்டிலானேனோ ?

February 2, 2012

தீராக் காதல் !!!

உன்னைப் பற்றி எழுத நினைக்கையில்
பக்கங்கள் தீர்ந்தாலும் தீராத ஊற்றுப்பேனா !
பேருந்து பயணத்தின் பொழுது வெப்பம்கூட
அருகருகே அமர்ந்தும் தீராத மோகம் !
கையசைத்து விடைப்பெற்று பிரிகையில்
தலை மறைந்தும் தீராத தேடல் !
தினம் பலமுறைப் பேசி துண்டிக்கையில்
முத்தம் ஈந்தும் தீராத ஏக்கம் !
இதயத் துடிப்பு அடங்க அணைத்தும்
விரல் கோத்தும் தீராத தாகம் !
இதழ் சேர்த்ததும் தீர்ந்திடதான் தவமிருக்கிறதோ ?