September 22, 2016

நானும் தனிமையும் !



பலமுறை எத்தனித்தும் செய்வதில்லை

வாசலின் இரும்புக்கதவுகளுக்கு எண்ணெயிடுதலை

நீ வருவதை நான் முன்கூட்டியே அறிய உதவுவதால் !!!


நிறுத்த முடிந்தாலும் விழைவதில்லை

சமையலறை குழாய்நீர் சொட்டுகளாய் வீணாதலை

தனிமையில் அந்த சத்தத்தை துணையாய் உணர்வதால் !!!


செய்யத் தோன்றினாலும் முனைவதில்லை

இரவெல்லாம் எரியும் மின்சார விளக்கணைத்தலை

நீயில்லா இரவுகள் இன்னும் இருண்டு அச்சமூட்டுவதால் !!!


உடல் விரும்பினாலும் ஏற்றுக்கொள்வதில்லை

குளிரூட்டப்பட்ட அறையில் கம்பளி போர்த்துதலை

நாம் பகிரும் போர்வை தனித்திருக்கையில் கனத்திருப்பதால் !!!







August 15, 2016

போராளி !


கனவுகளை காப்பாற்ற காலத்தை தியாகம் செய்கிறேன்

நானும் தியாகிதான் !!!

இலட்சியத்தை அடைந்திட உள்மனதோடு போராடுகிறேன்

நானும் போராளிதான் !!!

பிறரின் கேலிகளையும் கேள்விகளையும் அமைதியாய்      
கையாள்கிறேன்

நானும் காந்தியவாதிதான் !!!

பெண்ணானதால் பெற்ற  சுதந்திரத்தில் பாதிதான் அனுபவிக்கிறேன்

அதனால் தானோ என்னவோ

எனக்குள்  சுதந்திர தாகம் இன்னும் தணியவேயில்லை !!!