December 22, 2017

காற்று வெளியிடை

உன்னறை திறந்து திறந்து 

                  உன்னை என்னுள் செலுத்திக் கொள்கிறேன் 

உன்னுரைக் கவர்ந்து கவர்ந்து 

                  உன்னை என்னுள் ஒளித்துக் கொள்கிறேன் 

உன்மணம் உணர்ந்து உணர்ந்து 

                  உன்னை என்னுள் நிரப்பிக் கொள்கிறேன் 

உன்னெதிர் அமர்ந்து அமர்ந்து 

                  உன்னை என்னுள் கடத்திச் செல்கிறேன்

உன்நகை கொணர்ந்து கொணர்ந்து 

                  உன்னை என்னுள் குவித்து வைக்கிறேன் 

உன்னால் நான் நிரம்பிய பின்னும் 

                  உன்னை வெளியில் தேடுகிறேன் !!!



December 12, 2017

இடம் பொருள் காலம் !

இருளைத் தவணை முறையில்

                      இடையிடையே அப்பத் துவங்கியிருக்கும் இரவில்

இசை உணரா செவிகளுக்கு   தினமும்

                      இசை கொணரும்  கடலலைகளின் அருகில்

இரவல் ஒளியும் இதயம் வருடும்  குளிரும் 

                       இணைத்து  ஒருங்கே உமிழும் நிலவொளியில்

இலை கவிழ்ந்தும் அந்தி மயங்கியதால்

                       இதழ் குவிந்தும் மணம் தவழும் வனத்தில்

இமை பொருத்தி இடை வளைத்து

                        இதழ் துவைத்து  இன்பம் கண்டிருந்தோம் !

இன்று

        இரவில்லை

                    இசையில்லை

                                நிலவில்லை

                                            வனமில்லை

ஆனாலும் இன்பமோ ஏராளம் !!!

இணைவது உன்னோடென்றால் இடம் பொருள் காலமேது ?




November 30, 2017

அந்த நாளும் வந்திடாதோ ?

கலைந்த முகிலோடு காற்றென கலப்பேனோ

கலையாத கோலத்தின் வண்ணமென மாறுவேனோ

கலையறியா சிறுவர்களின்  சிரிப்போடு சேர்வேனோ

கலைநிறை சிலையை சிறுவண்டாய் துளைப்பேனோ

களைப்பூட்டா கதையினுள்ளே கருவாய் மறைவேனோ

களைப்பாற்றும் மரங்களின்  நிழலாய் நிறைவேனோ

களை வளர்ந்த விளைநிலத்தில் மலராய் மலர்வேனோ

களை நீக்கிய பயிரினூடே  தும்பியாய் பறப்பேனோ

கழைக்கரும்பின் கழியில் இனிப்பாய் இணைவேனோ

கழை நிரம்பிய காட்டில் இசையாய் கரைவேனோ

கழைக்கூடை கனியுள்ளே  சுவையாய் ஒளிவேனோ

கழையாகிய நானும் குழலாவது என்றோ?


Related image

November 26, 2017

மனக்கன்று !

கட்டுடலின் ரோமம் நினைவூட்டும்  கம்பளி 

கட்டியவிழ்த்ததால் மெருகேறி கிடக்கும் புடவை 

கட்டியணைத்து உறங்கிய தலையணை 

கட்டுக்கடங்காமல் கொண்டிருந்த காதல் வெறி

கட்டிலில் கருவாகிய வரியில்லா கவிதைகள் 

கட்டுக்கதைகளால் நிறைந்திருந்த கடந்த காலம் 

கட்டிவெல்லச் சிரிப்பில் கலந்திருக்கும் கவலை 

கட்டுக்கட்டாய் குவிந்திருக்கும் வாழ்த்து மடல்கள் 

கட்டிவைத்தாலும் கொட்டித்தீர்க்கும் மலரின்மணம் 

கட்டுமரம் கண்முன் மறையும்  கடற்கரை 

கட்டியகுழலோடு சேராமல் தனித்தாடும் ஒற்றை முடி 

                               என எதை நினைப்பினும் என் மனம் 

கட்டுத்தறியாய்  உன் நினைவை நெய்யத் தொடங்குதடா !!!

கட்டவிழ்த்ததும் உனை நோக்கி வருகின்றதே 

என் மனமும் கன்றுதானோ ?




November 25, 2017

அந்தாதி

கனம் உன்னை பிரிந்தாலும் 
கனம் கூடுதே மனம் 

மனம் உன்னை நினைத்தாலும் 
மணம் கூடுதே காற்றில் 

காற்றில் கூந்தல் கலைந்தாலும் 
கரம் தேடுதே கண்கள் 

கண்கள் என்மேல் பட்டாலும் 
காதல் தேடுதே இதயம் 

இதயம் இரண்டும் இணைந்தாலும் 
இதழ்கள் கேட்குதே  முத்தம் 

முத்தம் நூறு வைத்தாலும் 
முழுமையடையவில்லையே !

நம் காதலும் அந்தாதிதான் 
முடிந்த  இடத்திலேயே தொடங்குகிறது !!!!

September 8, 2017

ஓட்டம் !!!

ஒரு வருட மென்பொருள் வேலை 

ஒரு விதத்திலும் உடன்வரவில்லை -எனினும் 

உள்ளத்திலிருந்து ஒதுக்கிவிட முடியவில்லை !!!

இரண்டு வருட காதல் காவியம் 

இணைந்தும் இன்பம் இல்லை -எனினும் 

இதயத்திலிருந்து நீக்கிவிட்டால் நானேயில்லை !!!

மூன்று வருட மருத்துவக்கனவு 

மருந்துக்கு கூட நிறைவேறவில்லை -எனினும் 

மனதிலிருந்து தூக்கியெறிய மனமில்லை !!!

நான்கு வருட மின்னியல் உழைப்பு 

நாளொன்றுக்கு கூட உதவவில்லை -எனினும் 

நெஞ்சிலிருந்து அகற்ற தெரியவில்லை !!!

ஐந்து வருட ஆட்சிப்பணி விழைவு 

வெற்றி இன்னும் விளங்கவில்லை -எனினும் 

அடியோடு விட்டுத்தள்ளிவிட  தைரியமில்லை !!!

என் கனவுகள் நிறைவேறுவதில்லையோ ? - இல்லை 

நான் நிறைவேறும் கனவுகள் காண்பதில்லையோ ?

பகல்களை வெறுக்கிறேன் கனவுகள் துரத்துவதால் ...

இரவுகளை வெறுக்கிறேன் நினைவுகள் துரத்துவதால் ....

என்று நிற்குமோ இந்த ஓட்டம் !!!



August 16, 2017

மனதில் ஒரு மழைக்காலம் !

வானமும்  இருண்டது வனமும் இருண்டது

என்னறை மட்டும் இருளவில்லை

உன்நினைவு போல் மேகத்திற்கு இருளூட்டத் தெரியாதோ !

கொடியும்  சிலிர்த்தது மலரும்  சிலிர்த்தது

என்னுடல் மட்டும் சிலிர்க்கவில்லை

உன்விரல்போல் காற்றுக்கு சிலிர்ப்பூட்டத்  தெரியாதோ !

குடையும் நனைந்தது  உடையும் நனைந்தது

நான் மட்டும் நனையவில்லை

உன்முத்தம் போல்  மழைக்கு  நனைக்கத்  தெரியாதோ !

குளமும் நிரம்பியது குறுநதியும் நிரம்பியது

என் மனம் மட்டும் நிறையவில்லை

உன்விழிபோல் வெள்ளத்திற்கு நிரப்பத்  தெரியாதோ !

மரமும் சாய்ந்தது  சாதகப்பலகையும்  சாய்ந்தது

என்மனம் மட்டும் சாயவில்லை

உன்குரல்போல் நீருக்கு என்னை சாய்க்கத்  தெரியாதோ !

ஊருக்கெல்லம் ஒரேயொரு மழைக்காலம் -

உன்னால் தினம் தினம் என் மனம் காணும்  மழைக்காலம் !!!

August 15, 2017

விந்தை மனிதர்கள் -4

ம்மிரண்டு இதயங்களும் இணைந்த 

நாலைந்து வருடங்கள் பின்சென்று 

நினைவில் நின்றிருக்கும் நிமிடமெல்லாம் 

நீங்காமல் எண்ணி பார்க்கிறேன்  

நுணுக்கங்கள் பல கையாண்டு 

நூலிழையில் எனை உன்வசம் சாய்த்து 

நெடியதொரு பெருமுத்தம் இழைத்து 

நேற்றும் இன்றும் மறக்கச் செய்தாய்  

நைல் நதியின் பெருக்கை  மிஞ்சும் உன் வேகத்தால் 

நொடிப் பொழுதும் நீங்காமல் காதல் 

நோய் கொண்டு சுற்றினாய் - 

இன்று காதலும் இல்லை நோதலும் இல்லை !!!

அடிக்கடி  இயல்பை மாற்றி கொள்ளும் நீயும் 

விந்தை மனிதன்தான் !!!







 


July 30, 2017

விந்தை மனிதர்கள் -3

ர்மத்தை காக்க போராடுபவன் அல்ல -

தாரத்தை தோல்வியிலிருந்து மீட்பவனே வெற்றியாளன் !

தினமும் திறமைகள் வெளிக்காட்டுபவன் அல்ல -

தீராமல் காதலிக்கும் மனைவியை நேசிப்பவனே  தலைவன் !

துயரங்கள் துடைக்க ஓடிச்செல்பவன் அல்ல -

தூக்கம் தொலைக்கும்  துணையை  மதிப்பவனே பண்பாளன் !

தெரியாத மனிதருக்கும் இறங்குபவன் அல்ல -

தேடிக்  கிடைக்கா  இல்லாளுக்கு  உதவுபவனே தயாளன் !

தையலை மையலுறச் செய்பவனே காதலன் !

தொலைதூர உறவுகளை நினைவுகூர்பவன் அல்ல -

தோளில் சாய்ந்து  அவளை தேற்றுபவனே  நண்பன் !

பிறருக்கும் பிரியமானவளுக்கும் வித்தியாசம் தெரியாமல்

பாகமானவளை சோகமாக்கும் விந்தை மனிதர்கள் !!!






July 19, 2017

விந்தை மனிதர்கள் - 2

ரித்திரம் பேசும் வீரர்கள் சிலர்

சான்றோர் ஏசும் கோழைகள் பலர்

சிகரம் தொட உழைப்பவர் சிலர்

சீக்கிரம் உயர நடிப்பவர் பலர்

சுதந்திரம் வேண்டி மரித்தவர் சிலர்

சூழ்ச்சிகள் செய்து பிழைத்தவர் பலர்

செய்த புண்ணியத்தில் களிப்பவர் சிலர்

சேர்த்த பாவத்தை சுமப்பவர் பலர்

சைன்யங்கள் தோன்ற வித்திட்டோர் சிலபலர்

சொல்லை செயலாக்கி உயர்பவர் சிலர்

சோம்பித் திரிந்து சரிபவர் பலர்

சௌக்கியமாய் வாழ பிறரை அழிக்கும் சிலர்

சிலருக்கும் பலருக்கும் இடையில்

சிக்கித் தவிக்கும் விந்தை மனிதர்கள் !!!!

July 14, 2017

விந்தை மனிதர்கள் - 1

டலில் கரைக்கான தேடல் 

காதலில் உறவுக்கான தேடல் 

கிழக்கில் விடியலுக்கான தேடல் 

கீழ்வானில் விண்மீனுக்கான தேடல் 

குரலில் இனிமைக்கான  தேடல் 

கூற்றில் உண்மைக்கான தேடல் 

கெட்டதில் நல்லதுக்கான தேடல் 

கேட்டதில் அனுபவத்திற்கான தேடல் 

கையில் பெறாதவைக்கான  தேடல் 

கொட்டும் மழையில் குடைக்கான தேடல் 

கோபத்தில் ஆறுதலுக்கான தேடல் 

என தேடல்களிலேயே தொலைந்து போகும் மனிதர்கள் !!!


June 30, 2017

காற்றே !!!

மரத்தை உலுக்கி சருகுகள் நீக்கும் காற்றே - என்

கடந்த காலத்தை  உலுக்கி  நினைவுகள் அகற்றாயோ ?

குரலைக் கடத்திச் சென்று காதுகளில் சேர்க்கும் காற்றே -என்

கனவைக் கடத்திச் சென்று நிஜத்தில் சேர்ப்பிப்பாயோ ?

கனமில்லா  பட்டங்களை பறக்கவைக்கும் காற்றே - என்

கனத்த இதயத்தை  உயரப் பறக்கவைக்க மாட்டாயோ ?

கண்டங்கள்  கடந்து சுதந்திரமாய் உலவும் காற்றே -என்

எண்ணங்களில்  இருந்து  விடுதலை பெறச் செய்யாயோ ?

மேகத்தைக் கலைத்து மழையைப் பெய்விக்கும் காற்றே - என்

சோகத்தைக் களைந்து இன்பம் பொழிய வைப்பாயோ ?

புயலாய் மாறி நதிகளின் வழி மாற்றும் காற்றே -என்

வாழ்வில்  ஊடுருவி வலிகள் ஆற்ற மாட்டாயோ ?

குழலில் நுழைந்து இசையை உருவாக்கும் காற்றே - என்

மனதில் நுழைந்து நம்பிக்கையை கருவாக்க மாட்டாயோ ?

புகுந்து வெளிவந்து உயிரை காத்திருக்கும் மூச்சு  காற்றே !!!

என் இறுதி வேண்டுகோள் இதுதான்

எனக்குள் பிரவேசிப்பதை நிறுத்துவாயோ ?


June 28, 2017

கொட்டிக்கிடக்கும் காதல் !

பலநாட்கள்  உன்னோடு உரக்கச் சிரிக்கும்போதும் 

சிலநாட்கள்  உன்முன்னே உடைந்து அழும்போதும் 

கண்ணீர் துடைக்கும் உன் விரல்களை விரும்புகிறேன் 

என் கனவுகளை உனதாய் ஏற்று  நிறைவேற்றவும் 

எனக்காக நீ சேமித்த  காதலை பரிமாறவும் 

நீளும் உன் கரங்களின் மீது காதல் கொள்கிறேன் 

பேருந்து பயணங்களில் உறங்கி கொள்ளவும்  

சலனமுற்றிருந்தால் தலை சாய்த்துக்கொள்ளவும் 

உதவும் உன் தோள்களின் மீது மையல் கொள்கிறேன் 

என் நினைவுகள் நிரப்பிய இதயத்தை  உள்ளேயும் 

என் நெற்றிப்பொட்டை வெளியேயும் தாங்கும் 

உன் மார்பின் மீது மோகம் கொள்கிறேன் 

அழைக்கையில் விடுக்கும் அனிச்சை புன்னகையும் 

ஆழமாய் விதைக்கும் ஆங்கில முத்தமும் 

தெரிந்த இழல்களின் மேல் இச்சை கொள்கிறேன் 

காதுமடல் பற்றியிழுக்கும் உன் பற்கள் 

மூச்சினாலேயே  கிறங்கடிக்கும் உன் மூக்கு 

அரைகுறையாய் வளர்ந்த உன் மீசை 

காந்தமாய் கவர்ந்திழுக்கும் உன் கண்கள் 

உரசினால் பற்றிக்கொள்ளும் உன் கன்னம் 

அடிக்கடி முத்தம் கேட்கும் உன் நெற்றி 

நான் இறுகப் பற்றும் உன் தலைமுடி 

என  அங்கங்கள் தோறும் என் காதல் கொட்டிக்கிடக்கிறது 

போதும்........

பாதி அங்கம் விவரிக்கவே வார்த்தைகளின் பஞ்சம் .......



June 20, 2017

மழைத் தொடர்பு



பெய்யத் தொடங்கியதும் எழும் மண்வாசனை இல்லை

பெய்து முடித்ததும்  குப்பை மணத்துக்கு குறைவில்லை  

நனைவதற்கு மரங்களோ திளைப்பதற்கு குருவிகளோ இல்லை

ஏந்திக்கொள்ள மாடிகளும் அடைக்க  ஜன்னல்களும் உண்டு  

மண்குடித்த மிச்சத்தை சேகரிக்க  குளங்கள் இல்லை

கடைசியாய் கடலில்  சேர சாக்கடைகள் பலவுண்டு  

வானம் பார்த்து செய்திருந்த விவசாயம் இல்லை 

வசதியாய்  வாழ  வானிலை அறிக்கைகள் எக்கச்சக்கம் 

ஓடுகளில்  வழியும் மழைநீர் பிடிக்க குடங்கள் இல்லை 

மழையில்லா ஊரில்  மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உண்டு

மழை நின்றதும் காகிதக் கப்பல்  விடும்  மழலைகள் குறைவு 

விடுமுறைக்காக  மழையை வேண்டும் குழந்தைகள் ஏராளம் 

மழைக்கும் மனிதனுக்குமான தொடர்பு மாறிவிட்டது 

மனங்கள் மட்டும் இன்னும் மழை ரசிக்க விழைகிறது ......

 

March 29, 2017

அவளும் அழகும் !!!

வெள்ளிக் கிழமை அதிகாலையில்

அள்ளி  முடிந்திருக்கும் குழலழகில்

கள்ளி உன்னிடம் நான் தொலைந்தேன் !


புள்ளி வைக்க வாசலில் இடம்தேடி

துள்ளி விளையாடும் விழியழகில்

வள்ளி உன்னிடம் எனை இழந்தேன் !


கிள்ளி முகரா மலர் நோக்கி

எள்ளி  நகையாடும் இதழழகில்

தள்ளி நின்றும் நான் விழுந்தேன் !





March 23, 2017

கோடையில் குளிர்


குளிர்நீர் குடிக்க விரும்பி குழவிகளும் அடம்பிடிப்பர் 

குளிர்பான கடைகள் தேடி இளைஞர்கள் இடம் பிடிப்பர் 

குளிர் பிரதேசங்கள் நோக்கி குடும்பத்துடன் படையெடுப்பர் 

குளிர்சாதனப் பெட்டியின் உறைவிப்பானை நிரப்பி வைப்பர்  

குளிரூட்டிகளுக்கு  ஒருநாளும் ஓயாமல் வேலை கொடுப்பர் 

குளிர்காற்று வேண்டி மொட்டை மாடியில் இரவைக் கழிப்பர் 

குளிர்நிழல் விழைந்து  வெயிலிலும் குடையோடு பயணிப்பர் 

குளிர் நீங்க மறுத்து குளியலறையில் சிலநேரம் தவமிருப்பர் 

அட ......குளிர்காலத்தை விட கோடையில்தான் 

குளிர் அதிகம் பேசப்படுகிறது ........

ஆனால் இவையெல்லாம் எனக்கு புரிவதில்லை - ஏனெனில் 

கோடை வெயிலும் நான் உன் வசமிருக்க  

குளிர்நிலவாய்த்  தெரிகிறதே !

March 10, 2017

நிபந்தனையில்லா உலகம் !!!


பூத்தொடுக்க மட்டுமே உதவினோம் - இன்று

போர் தொடுக்கவும் துணிந்து விட்டோம் *

பெற்று விட்டோமா சம உரிமையை ?

பள்ளி செல்லக்கூட உரிமையில்லை - இன்று

பல நாடுகள் சென்று பயில்கிறோம் *

பார்த்து விட்டோமா விடுதலையை ?

ஓட்டு போட அனுமதியில்லை - இன்று

ஒன்றாய் பாராளுமன்றத்தில் அமர்கிறோம் *

அடைந்து விட்டோமா சுதந்திரத்தை ?

வீட்டில் மட்டுமே வேலை செய்தோம் - இன்று

விண்வெளியில் கூட  உலவுகிறோம் *

வெளிவந்தோமா  அடிமைச்சிறையிலிருந்து ?

வீதியில் நடக்க தயங்கினோம் - இன்று

விமானம் இயக்கி பழகுகிறோம் *

வந்துவிட்டதா விடியல் ?

(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது )

நிபந்தனையில்லா உலகம் செய்யும் வரை

வலிகள் தொடரும் ....

மகளிர் தின வாழ்த்துகள் !!!



Image result for sad bird in cage

March 5, 2017

கணக்கு !!!

பள்ளிக்கால கனவுகள் நினைவு கூர்ந்தால்

வெள்ளிவானின் தூரம்  சிறிதாய்த்  தோன்றும்  !!!

கல்லூரி நாட்களின் நட்புகள்  கணக்கெடுத்தால் 

கடல்மீறி விழுந்திடும் அலைகள் துளிகளாய்த்  தோன்றும் !!!

காதல் பொழுதுகளின் பரிசுகள் குறிப்பெடுத்தால் 

பாதங்கள் கடந்த கடற்கரை மணல் குவியலாய்த்  தோன்றும் !!!

என் மகளுக்கு நானீந்த முத்தங்கள் எண்ணிப் பார்த்தால் 

விண்மீன்கள் விரல் விட்டென்னும் புள்ளிகளாய்த் தோன்றும் !!!

இவை இருக்கட்டும் .......

கணவனாய் நீ கொட்டும்  காதல் அளக்க விழைந்தால்   

கண்ணெதிரே விரியும்  உலகமே கடுகாய்ச் சிறுத்து விடும் !!!