June 30, 2017

காற்றே !!!

மரத்தை உலுக்கி சருகுகள் நீக்கும் காற்றே - என்

கடந்த காலத்தை  உலுக்கி  நினைவுகள் அகற்றாயோ ?

குரலைக் கடத்திச் சென்று காதுகளில் சேர்க்கும் காற்றே -என்

கனவைக் கடத்திச் சென்று நிஜத்தில் சேர்ப்பிப்பாயோ ?

கனமில்லா  பட்டங்களை பறக்கவைக்கும் காற்றே - என்

கனத்த இதயத்தை  உயரப் பறக்கவைக்க மாட்டாயோ ?

கண்டங்கள்  கடந்து சுதந்திரமாய் உலவும் காற்றே -என்

எண்ணங்களில்  இருந்து  விடுதலை பெறச் செய்யாயோ ?

மேகத்தைக் கலைத்து மழையைப் பெய்விக்கும் காற்றே - என்

சோகத்தைக் களைந்து இன்பம் பொழிய வைப்பாயோ ?

புயலாய் மாறி நதிகளின் வழி மாற்றும் காற்றே -என்

வாழ்வில்  ஊடுருவி வலிகள் ஆற்ற மாட்டாயோ ?

குழலில் நுழைந்து இசையை உருவாக்கும் காற்றே - என்

மனதில் நுழைந்து நம்பிக்கையை கருவாக்க மாட்டாயோ ?

புகுந்து வெளிவந்து உயிரை காத்திருக்கும் மூச்சு  காற்றே !!!

என் இறுதி வேண்டுகோள் இதுதான்

எனக்குள் பிரவேசிப்பதை நிறுத்துவாயோ ?


June 28, 2017

கொட்டிக்கிடக்கும் காதல் !

பலநாட்கள்  உன்னோடு உரக்கச் சிரிக்கும்போதும் 

சிலநாட்கள்  உன்முன்னே உடைந்து அழும்போதும் 

கண்ணீர் துடைக்கும் உன் விரல்களை விரும்புகிறேன் 

என் கனவுகளை உனதாய் ஏற்று  நிறைவேற்றவும் 

எனக்காக நீ சேமித்த  காதலை பரிமாறவும் 

நீளும் உன் கரங்களின் மீது காதல் கொள்கிறேன் 

பேருந்து பயணங்களில் உறங்கி கொள்ளவும்  

சலனமுற்றிருந்தால் தலை சாய்த்துக்கொள்ளவும் 

உதவும் உன் தோள்களின் மீது மையல் கொள்கிறேன் 

என் நினைவுகள் நிரப்பிய இதயத்தை  உள்ளேயும் 

என் நெற்றிப்பொட்டை வெளியேயும் தாங்கும் 

உன் மார்பின் மீது மோகம் கொள்கிறேன் 

அழைக்கையில் விடுக்கும் அனிச்சை புன்னகையும் 

ஆழமாய் விதைக்கும் ஆங்கில முத்தமும் 

தெரிந்த இழல்களின் மேல் இச்சை கொள்கிறேன் 

காதுமடல் பற்றியிழுக்கும் உன் பற்கள் 

மூச்சினாலேயே  கிறங்கடிக்கும் உன் மூக்கு 

அரைகுறையாய் வளர்ந்த உன் மீசை 

காந்தமாய் கவர்ந்திழுக்கும் உன் கண்கள் 

உரசினால் பற்றிக்கொள்ளும் உன் கன்னம் 

அடிக்கடி முத்தம் கேட்கும் உன் நெற்றி 

நான் இறுகப் பற்றும் உன் தலைமுடி 

என  அங்கங்கள் தோறும் என் காதல் கொட்டிக்கிடக்கிறது 

போதும்........

பாதி அங்கம் விவரிக்கவே வார்த்தைகளின் பஞ்சம் .......



June 20, 2017

மழைத் தொடர்பு



பெய்யத் தொடங்கியதும் எழும் மண்வாசனை இல்லை

பெய்து முடித்ததும்  குப்பை மணத்துக்கு குறைவில்லை  

நனைவதற்கு மரங்களோ திளைப்பதற்கு குருவிகளோ இல்லை

ஏந்திக்கொள்ள மாடிகளும் அடைக்க  ஜன்னல்களும் உண்டு  

மண்குடித்த மிச்சத்தை சேகரிக்க  குளங்கள் இல்லை

கடைசியாய் கடலில்  சேர சாக்கடைகள் பலவுண்டு  

வானம் பார்த்து செய்திருந்த விவசாயம் இல்லை 

வசதியாய்  வாழ  வானிலை அறிக்கைகள் எக்கச்சக்கம் 

ஓடுகளில்  வழியும் மழைநீர் பிடிக்க குடங்கள் இல்லை 

மழையில்லா ஊரில்  மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் உண்டு

மழை நின்றதும் காகிதக் கப்பல்  விடும்  மழலைகள் குறைவு 

விடுமுறைக்காக  மழையை வேண்டும் குழந்தைகள் ஏராளம் 

மழைக்கும் மனிதனுக்குமான தொடர்பு மாறிவிட்டது 

மனங்கள் மட்டும் இன்னும் மழை ரசிக்க விழைகிறது ......