January 29, 2012

கைப்பேசிக் காதல்


கடைசியாய் வந்த அழைப்புகளில் முதலாய் உன் அழைப்பு,
கவிதைக் களமாகும் உன் குறுஞ்செய்தித் திரை ,
தவறிய அழைப்புப் பட்டியலில் தவறாமல் உன் பெயர் ,
அழைப்பொலியில் உனது விருப்பப் பாடல் ,
சேமிக்கப்பட்ட செய்திகளில் உனதே மிகப் பலவாய் ,
சாதகமான எண்ணாய் உனது தொடர்பெண் .....
கைப்பேசி கையிலிருப்பதோ என்னிடம் - ஆனாலது
கையகப்படுத்தி வைத்திருப்பதோ உன் காதலை !

January 27, 2012

இயல் !


சமூகவியல் - நம் மாலை நேர சந்திப்பு ..
புவியியல் - உன் விழி வீசும் ஈர்ப்பு விசை ..
வேதியியல் - உனது மூச்சு முட்டும் முத்தம் ..
மின்னியல் - எனைத் தூண்டும் உன் தீண்டல் ..
கணிதம் - முடிவிலியாகும் என் இதயத் துடிப்பு ..
மொழியியல் - உன் இதழ் உதிர்க்கும் வார்த்தை ..
உளவியல் - உன் நினைவுகள் நிரம்பிய என் கனவு ..
விலங்கியல் - உன் அருகாமையில் சூடேறும் சுவாசம் ..
தொடர்பாடல் - உன் இரவு நேர செல்பேசிக் கவிதைகள் ..
தாவரவியல் - வெட்கம் பூக்கின்ற செடியாக மாறும் நான் ..
பொருளியல் - நீ கொடுக்கும் விலையற்ற காதல் பரிசுகள் ..
இயற்பியல் - உன் குரலில் தொனிக்கும் மின்காந்த அலைகள் ..என எண்ணில்லா
பாடங்கள் நம் காதலில் படிக்கிறேன் ! ! !

January 25, 2012

சுகம்


மென்றாலும் தின்றாலும் சுகம் ,
சுவை நீயானால் ...
கிடந்தாலும் நடந்தாலும் சுகம் ,

நிழல் நீ என்றால் ...
துடித்தாலும் நடித்தாலும் சுகம் ,
இதயம் நீயானால் ...
நின்றாலும் சென்றாலும் சுகம் ,
துணை நீ என்றால் ...
நிறைந்தாலும் உறைந்தாலும் சுகம் ,
மழை நீயானால் ...
வலித்தாலும் சலித்தாலும் சுகம் ,
காதல் உனதென்றால் ...


January 22, 2012

விரல்

கூட்டலில் பதினொன்றாவதாக நான் எண்ணிக் கொண்ட உன் விரல்,
விழுந்துவிடக் கூடாதென்று நான் பிடிக்கத் தொடங்கிய உன் விரல் ,
உடைந்து விடும் பொழுதுகளில் என் தலை கோதிய உன் விரல்,
நான் விம்மி அழும்போது என் விழி துடைத்த உன் விரல் ,
ஆனால் என் விரலோ ,
உன் முகம் கண்டால் நகம் இழக்கும்
உன் விழி கண்டால் முகம் மூடிக் கொள்ளும்
உன் நினைவுகள் எண்ணி கவிதைகள் கிறுக்கும்
உன் புன்னைகையில் தரையெங்கும் கோலமிடும்
இணையுமோ இவையிரண்டும் ....

January 6, 2012

பட்டாம்பூச்சி

உன்னை ஏந்தத் துடிக்கிறதே என் விரல் , அதனிடமா .. ?
உன்னில் உறைந்து நிற்கிறதே வண்ணம் , அதனிடமா.. ?
உன் வருகைக்காக காத்திருக்கிறதே தேன் , அதனிடமா.. ?
உன்னால் தாகம் தீர்த்து கொள்கிறதே மலர் , அதனிடமா.. ?
உன்னோடு சுற்றித் திரிகிறதே அந்த காற்று , அதனிடமா.. ?
உன்னிடம் மோகம் வளர்த்துப் போகிறதே மகரந்தம் , அதனிடமா ..?
வட்டமிடும் பட்டாம்பூச்சியே .... உன் காதல் யாரிடம்... ?

January 4, 2012

கடவுளின் துளி !!!

கண்மூடிக் கிடந்தாலும் கருவில் வாழும்
கடவுளின் துளியைப் பற்றியே கனவு காண்பாள் !
மண் தொட்டதும் மழலையின் உச்சிமுகர்ந்த பின்னரே
உயிர்வளியை அள்ளிக் குடிப்பாள் !
பண்பட்ட நிலமாய் குழவியைத் தாங்கி செந்நீரைத் திரித்து
பாசமிகு பாலாய்க் கொடுப்பாள் !
விண்வெளியை சோதிக்கும் உலகில் அவள் பிள்ளைக்கு
நிலவைக் காட்டி அமுதூட்டுவாள்!
எண்ணிலடங்கா கற்பனைகள் வளர்த்து கதைகள் சொல்லி
குழந்தையை தூங்கச் செய்வாள் !
தண்மையும் வெம்மையும் தான் தாங்கிக் கொண்டு தன்
வாரிசைக் கருத்தாய்க் காத்திடுவாள் !
பெண்மையின் பெருமையெல்லாம் ஒன்றாய்ப் பெற்ற
அவளைத் தாயென்று கூறினால் தவறாகக் கூடும் !!!
தெய்வமென்று சொன்னால் மட்டுமே தகும் !!!!!