பூக்களின் வகையறியா வயதில் நீ உதிர்த்த புன்னகைப்பூ
மங்கிய நிலவின் ஒளியில் நாம் பகிர்ந்த நிலாச்சோறு
மூச்சு முட்டும் பேருந்து நெரிசலில் உரசும் நம் விரல்கள்
நெஞ்சைத் தொடும் நிமிடங்களால் நிரம்பிய என் நாட்குறிப்பு
முட்கள் முழுவதுமாய் நீக்கி நீ எனக்கு பரிசளித்த ரோஜா
கண்கள் பார்த்து பேசும்பொழுது தவழும் உன் குறுஞ்சிரிப்பு
சத்தம் இல்லா இரவில் நித்தமும் தோன்றும் உன் கனவு
சிந்தும் மழை நாட்களில் ஒற்றைக் குடையில் நம் பயணம்
சிப்பிகள் சேகரித்து நம் பெயர் எழுதிய கடற்கரை மணல்
விம்மி அழும் பொழுது கண்ணீர் துடைக்கும் உன் கைக்குட்டை
பொய்யேதும் சொன்னால் கோபத்தில் உயரும் உன் புருவம்
கார்கால மேகங்களில் உற்சாகமாய் நீ காட்டும் உருவங்கள்
செல்லும் இடமெல்லாம் தொடரும் உன் செல்லக் குறுஞ்செய்தி
எவ்விடம் முடியும் என்றுத் தெரியா சாலையில் நம் பொடிநடை
வாழ்வின் முற்றுப்புள்ளியைத் தொலைக்கச் செய்த உன் விழிகள்
கள்ளுண்ட வண்டாய் என்னைத் திணறச் செய்யும் உன் ஸ்பரிசம்
கற்றலில் உணராமல் உன் தொடுதலில் உணர்ந்திட்ட மின்சாரம்
என்னைக் கொல்லும் இவையெல்லாம் மெய்க்காதலின் விளைவோ ?
No comments:
Post a Comment