August 26, 2012

மொழிவிலக்கு !!!


உன் தவறுகளை நான் தடுப்பதில்லை ....
நீ பாவமாய் உதிர்க்கும் "Sorry"களை நேசிக்கிறேன் !!!
உடனடியாய் உனக்கொன்றுமே தருவதில்லை ....
நீ கெஞ்சலாய் கேட்கும் "Pleaseகளை விரும்புகிறேன் !!!
உனைப் பிரிகையில் பெரிதாய் வருத்தமில்லை .....
நீ உருக்கமாய் சொல்லும் "Miss You"களை காதலிக்கிறேன் !!!
தனிமை இரவுகளிலும் நான் தனித்திருப்பதில்லை .....
நீ இறுதியாய் அனுப்பும் "Good night " களை சேமிக்கிறேன் !!!
ஆங்கிலத்தின் மீது கோபமுமில்லை .....
இனிக்கத் தொடங்கியிருக்கிறது உன்னால் !!!


August 14, 2012

நிழல்படம்

பிரிந்து விட்ட காதலர்களை நினைத்துப் பார்க்கிறது 
பிணைத்து வைத்த கற்பலகை !
வலமிடமாய் கடக்கும் உயிர்வாழிகளை கண்டு நகைக்கிறது
குறுக்கும் நெடுக்குமாய் அடுக்கப்பட்ட தண்டவாள கற்கள் !
காலத்தின் கரம்கொண்டு ஓடு விலக்கி வானம்  வெறிக்கிறது  
வெயிலிலும் மழையிலும் இருளில் வாடிய கட்டிடம் !
ஆளில்லா நேரங்களின் அமைதியை ரசிக்கிறது 
நெரிசல் விரும்பிகளின் அருகே வசிக்கும் நடைபாதை !
அந்த நிமிடமும் வந்திடாதோ என எதிர்பார்த்து காத்திருக்கிறது 
கவனிப்பாரற்று துருவேறி நிற்கும் விளக்கு கம்பம் !
நீ எடுத்த நிழல் படமாதலால் உனைப் போலவே இருக்கிறது
          என்னால் புரிந்து கொள்ள இயலாததாய் !!!


August 12, 2012

பதிமூன்றாம் வாழ்த்து


பதிமூன்றில் தொடங்கி முடிந்த டீன்ஏஜ் இருபத்திமூன்றில் மீண்டும் உன்னால் தொடங்கியது

பதிமூன்றாம் வயதில் உன்னைப் பார்த்திருந்தால் இந்நேரம் காதலின் வயது பத்தைக் 
கடந்திருக்கும் 

பதிமூன்று அதிர்ஷ்டம் குறைவான எண்ணாம், ஆம் உன் பிறந்த நாளை ஒருநாளில் 
தவறவிட்டாதே

பதிமூன்று மணி பகலில் உன்னுடன் கடற்கரையில் காதல்புரியும் எண்ணமும் என்னைக் 
கைவிடவில்லை 

பதிமூன்றாம் பிறையையும் ரசிக்க நாமுண்டு என நினைத்து காத்திருக்கும் நிலவும் 
உன்போல் கறையற்றில்லை

பதிமூன்று வருடங்கள் பின்சென்று நாம் பிரிந்த நாளை நினைத்து மார்ச்சின்

பதிமூன்றாம் நாள் வாழ்த்துகிறேன் ! இனி நமக்குப் பிரிவில்லைஎன !!!!!!!!



பன்னிரெண்டாம் வாழ்த்து

பன்னிரண்டு வருடமாய் மலராத என்னை வெட்கமுதிர்க்கும் செடியாய் மாற்றினாய்

பன்னிரண்டு ஆண்டு கடந்த என் பெண்மையின் தேடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாய் 

பன்னிரு கரங்கள் இருந்தால் உன் ஆறரிவையும் அணைக்கலாமே என்று எண்ணச் செய்தாய் 

பன்னிரண்டாம் வாரம் கருவில் விரல்மூடக் கற்றேன் நீயே விரல்கோக்க கற்பித்தாய் 

பனிரெண்டாம் மாதம் நிகழ்ந்த சந்திப்பில் காதல் நோயொன்று தொற்றிச் சென்றாய் 

பனிரெண்டாம் நூற்றாண்டில் பார்கண்ட காற்றாலையாய் என்னுள் மின்சாரம் பாய்ச்சினாய் 

பன்னிரு மாதங்கள் தாண்டி காதலிக்க  சில மாதம் வேண்டுமெனத் தோன்றச் செய்தாய் 

பன்னிரு ராசிகளும் உனக்கே ஒத்துழைத்து உன்னை உயர்த்த வாழ்த்துகிறேன் மார்ச்சின் 

பன்னிரெண்டாம் நாள் !!! நாம் காதலுற்று பிரிவற்று வாழ்ந்திருக்க !!!

பதினோராம் வாழ்த்து

பதினோராம் நாளுன்னை பிரிகையில் ஏதோ  ஓருணர்வால் படபடக்கிறது மனம் !
பதினோராம் முறை உன் ஓவியத்திற்கு முத்தமிட்டும் அடங்கவில்லைத் தாகம் !
பதினொரு மணிக்கு உன் அழைப்பு கேட்டு நாணம் சூடிக் கொள்ளும் போர்வை !
பதிநோரைந்து முற்சேர்க்கை கனக்கும் தேகம் உன் தீண்டலில் சிறகு விரிக்கும் !
பதினோராம் மாதமாகியும் உலகம்பாரா சிசுவாய் வெளிவரத் துடிக்கும் காதல் !
பதினொரு செப்டெம்பரில் நடந்
து போல் இதயம் இடித்துச் சென்றது உன் முத்தம் !
பதினொன்றின் இருவொன்றாய் நாம் வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின் !
பதினோராம் நாள் நாம் ஒன்றாய் நூற்றாண்டுகள் கடப்போமென !!!!


பத்தாம் வாழ்த்து


பத்தாம் வகுப்பு பள்ளித் தோழி உனக்களித்த கடிதம் கசக்கையில் 
                காதலியாகப் போகிறோமென உணர்ந்திருக்குமோ என் உள்மனம் 
பத்து வயதில் பள்ளி முடித்து பிரிந்த நம் நட்பு பருவமடைந்தபின் 
                காதலாய் மலருமென அறிந்திருக்குமோ நம் பள்ளிக் கதவுகள்
பத்து ரூபாய் தாளொன்றில் நம் பெயரின் முன்னெழுத்துகள் எழுதி நீ நீட்ட 
                காதலிக்கு நீ தரும் பரிசென புரிந்திருக்குமோ அக்காகிதத்திற்கு
பத்து நிமிடம் நீடிக்கும் நம் ஊடல் முடிந்ததும் மூச்சுமுட்ட நீ முத்தமிட 
                காதலர்களென கண்பொத்திக்கொள்ளுமோ நம்மறை விளக்குகள் 
பத்து முறை இதழ் முத்தமிட்டால் பத்து வருடம் நீளும் ஆயுளெனின்
                காதலில் திளைத்துக் கிடந்தே முடிவிலியாகிப் போகுமோ நம்மாயுள்
பத்திலிருக்கும் சுழியமாய் உன் துயர் நீங்க வாழ்த்துகிறேன் பத்தாம் நாள் 
                காதல் கொண்டு நாம் வானை அளப்போமென !!!!!!!!

ஒன்பதாம் வாழ்த்து



ஒன்பதுத் திங்கள் வித்தியாசம் நமக்குள் , நான் ஜனித்ததும் கருவில் நீ உருக்கொண்டாயோ ?

ஒன்பதாம் வகுப்பு முதல் என்னுள் எழும் ஹார்மோன்களின் கேள்விகளுக்கு 

விடை நீதானோ  ?

ஒன்பதில் எட்டுப்பகுதி மூழ்கிக் கிடக்கும் பனிக்கட்டியாய் என் காதலின் ஆழம் நீ அறிவாயோ ? 

ஒன்பது மாதம் என் இருள்சூழ் கருவறையில் சிறையிருக்கப் போவது 

உன்னுயிர்த் துளிதானோ  ?

ஒன்பதாம் கோளாய் இருந்த நான் வீழ்ந்தின்று செயற்கைகோளாய் உனைச் சுற்றுவதேனோ  ?

ஒன்பது துவாரங்களில் செவியிரண்டு மட்டும் உன் குரல் ரசித்திருக்க 

என்னத்தவம் நோற்றதோ ?

தொண்ணூறு ஆண்டுகளானாலும் தோல்வியின்றி வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின் 

ஒன்பதாம் நாள் !! நாம் ஓராயிரம் ஆண்டுகள் பிணைந்திருப்போமென !!!!!!!!!


எட்டாம் வாழ்த்து


எட்டாவதாய் வாரத்தில் நாளொன்று வேண்டும் உன்னுடன் நானிருக்க

எட்டு கோள்களிலும் தனியொருவீடு வேண்டும் உன்னுடன் நான் வசிக்க

எட்டுத் திக்கிலும் கடற்கரைமணல் வேண்டும் உன்னுடன் நான் நடக்க

எட்டுமணி நேர இடைவேளை வேண்டும் உன்னுடன் தேநீர் நான் சுவைக்க

எண்ணிரண்டு மணிகள் நீளும் இரவு வேண்டும் உன்னுடன் நான் புணர

எட்டாவது அதிசயமாய் இமைக்காத இமைவேண்டும் உனை நான் ரசிக்க

எட்டில் ஒருபங்கான உன்தலை என்வசம் வேண்டும் என் மடி சாய்ந்திருக்க

எட்டித்தொடமுடியா உயரம் நீயடைய வாழ்த்துகிறேன் மார்ச்சின்

எட்டாம் நாள் !!! நாம் எப்பிறப்பிலும் ஒன்றாய் உயிர்த்திருப்போமென்று !!!

ஏழாம் வாழ்த்து


ஏழு கடல் தாண்டி வந்து மணப்பான் எவனோ என சிறு வயதில் கனவுகள் காணுவேன்

ஏழு மணியளவில் கடற்கரையில் நீயிட்ட ஒற்றை முத்தத்தில் நீதான் என்றானாய் !

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டுமென்று வேண்டப் போவதில்லை நான்

ஏழு நாள் வாழ்ந்தாலும் உன்னுடன்தான் வாழ்ந்திருக்க வேண்டுகிறேன் !

ஏழு நூறு கோடி உலக மக்கள் தொகையில் நான் தேடிய உறவெல்லாம்

ஏழு வண்ண வானவில்லாய் உன்னுருவில் என் கண்முன் காண்கிறேன் !

ஏழாம் மாதம் பிறந்த என்னுள் நாணம் பிறப்பித்த உன்னை மார்ச்சின்

ஏழாம் நாள் வாழ்த்துகிறேன் என்றென்றும் நாம் இணைபிரியாமலிருக்க !!!!!!

ஆறாம் வாழ்த்து


ஆறாம் விரலாய் உன் விரல் பிடித்துக் கொண்டு நடந்தபொழுது வந்ததே தவிர

ஆறாம் அறிவைக் கேட்டுக் கொண்டு வரவில்லை என் காதல் !

ஆறுபிறவி முடிந்திருந்தாலும் உன்னோடு நான் சிநேகிக்கும் விதத்தில் -தோன்றும்

ஆறிலும் நானே உன் துணையாய் இருந்திருக்கக் கூடும் என்று !

ஆறேழு முறை உன்னோடு நிலவும் வானும் ரசித்திருந்தாலும் -வருடம்

ஆறு சென்றபின் நம்வீட்டு நிலாமுற்றத்தில் உன் முத்தம் பெற ஏங்கியிருப்பேன் !

ஆறு மணிக்கெல்லாம் உனது அழைப்பொழிக் கேட்டு விழித்துக் கொள்ளும் என் இதயம்

ஆறு நிமிட உரையாடலுக்குப் பின்னும் உன் அருகாமைக் கேட்டுக் கெஞ்சும் !

அறுபது தாண்டினாலும் நரைத் தொட்டாலும் ஆறாக்காதலுடன் நாமிருக்க மார்ச்சின்

ஆறாம் நாள் வாழ்த்துகிறேன் நெடுங்காலம் நாம் நெருங்கியிருக்க !!!!!!

ஐந்தாம் வாழ்த்து


ஐந்தாம் வகுப்போடு முடிந்த நம் பள்ளிப் பயணத்தின் நினைவுகள் இன்னும் வண்ணத்தோடு

ஐந்தறிவுகள் போதும் நீ என் வசமெனில் என கனவு வளர்த்துக்கொள்கிறேன் திண்ணத்தோடு

ஐந்திணைகளில் கூடலும் கூடல் நிமித்தமுமான குறிஞ்சி மட்டும் நம்  எண்ணத்தோடு

ஐம்பூதங்களில் ஒன்றானாலும் காற்றுக்கு கூட இடமில்லை நம்மிடையான உறவில்

ஐந்திலக்கணம் கொண்டுலாவும் தமிழினும் இனியதாகும் பார்வைகள் உன் விழியில்

ஐவிரல் கோத்து ஆதரவாய்த் தோள் சேர்த்து துயர்கள் துடைத்திடுவாய் உன் பரிவில்

ஐம்பொறிகளும் அணைக்கத் துடிக்கும் காதலனாக பரிணாம வளர்ச்சி அடைந்த நண்பனே

ஐந்தடி என்னை காதலால் ஆட்கொண்டு விட்ட நீ நீடூழி வாழ்கவென மார்ச்சின்

ஐந்தாம் நாள் வாழ்த்துகிறேன் நாம் என்றென்றும் கலந்திருக்க !!!!!

நான்காம் வாழ்த்து


நான்காம் நாள் இணைவு ஒரு அத்தியாயமாய் தொடங்கியது

நான்காம் சாமம் தொடர்ந்த அந்த இரவின் இளமை அன்றே விளங்கியது

நான்கு திசைகளும் காதல் ராகம் இசைத்துக் கொண்டு நம்மை ரசித்திருந்தது

நான்கு புலன்களும் ஓய்வெடுக்க நமதிருவரின் விழிகள் மட்டும் உரசியிருந்தது

நான்கு அறைகள் கொண்ட இதயத்தில் ஐந்தாவதாய் ஒரு காதல் அறை திறந்திருந்தது

நான்கு மாத பிள்ளையாய் என் பெண்மை உன் இடைதொடலில் திமிறிக் கொண்டிருந்தது

நான்கு மணியானதும் உன் வாலிபம் உன்னை விரட்ட நம் நட்போ அதைத் தடுத்திருந்தது

நான்கு முறை தனியாய்க் கைசேர்த்து நடந்ததில் காற்றிலும் கூட மின்சாரம் பாய்ந்திருந்தது

நான்கு பாதங்களும் பதித்திருந்த சுவடுகளில் வீதிகளும் விழாக்கோலம் கண்டிருந்தது

நான்கு எழுத்து காதலனாய் இந்தக் காதலியோடு என்றும் கனவுகளில் கூட 

பிரியாமல் காதலித்திருக்க 

மார்ச்சின் நான்காம் நாள் வாழ்த்துகிறேன் !!!

மூன்றாம் வாழ்த்து


மூன்றாம் நாளும் நான் சாகரம் விரும்ப நீயோ சிகரமிட்டுச் சென்றாய்

மூன்று உலகமாய்த் தோன்றும் உனையே எனக்குத் தரச்சொல்லி

மூன்று கடவுளரில் ஒருவரைக் கண்டு வேண்டிக்கொண்டேன்

மூவேழு நிமிடங்கள் தாமதமாய் வந்த பேருந்தில் முண்டியடித்து நிற்பினும்

மூவெட்டு நிரம்பிய உன் குறுந்தாடி கைப்பட்டு வானுலவுவதாய் எண்ணம்

மூன்றாம் சந்திப்பின் முடிவில் எனக்குள் காதல்குழந்தை கருவுறத் தொடங்கியது

மூன்று மணி நேரம் நான் உன்னுடன் வாழ்ந்த நிமிடங்கள் போல

முப்பொழுதும் நம் உறவு முடியாமல் நீண்டிருக்க மார்ச்சின்

மூன்றாம் நாள் வாழ்த்துகிறேன் !

இரண்டாம் வாழ்த்து


இரண்டாம் நாளும் நம் வருகையை எதிர்பார்த்திருந்த கடற்கரைக்கு

இரண்டு கரங்களாலும் என்னைப் பற்றி நாம் காதலர்களென தெரிவித்தாய் ...

இரண்டு பேரையும் அனிச்சையாய் வீழ்த்திய அந்த கடலலைக்கு

இரண்டு நொடியில்அணைத்து தாழ்கையிலும் பிரிவில்லையென உணர்த்தினாய் ...

இரண்டு விழியாலும் அளந்தவண்ணம் நீ என் அருகிலிருக்கையில்

இறந்திறந்து உயிர்க்கிறது என் நாணம் !!!

இருவரும் இணைந்திருக்க உன்னை தருவித்த மார்ச்சின்

இரண்டாம் நாள் வாழ்த்துகிறேன் !!!

இரண்டுவரிக் கவிதையாய் எப்பொழுதும் இணைந்திருப்போமென !!!

முதல் வாழ்த்து


எனக்கே எனக்காக உன்னை இந்த உலகுக்கு ஈன்ற மார்ச் மாதத்தின்

ஒன்றாம் நாளே உனக்கு மின்வழி அனுப்புகிறேன்

என் ஆசை முத்தங்களை சுமந்து வரும் இந்த முதல்வாழ்த்து உனக்கே உனக்காக.. !!!

ஒன்றாம் வகுப்பில் நாம் இணைந்திருந்த ஞாபகம் இன்னும் என்னில் அழியாமல் ....

ஒன்றாய் நடக்கையில் உன் கரம் உரசி பற்றிக்கொள்ளும் தீ என்னில் அணையாமல் ....

ஒன்றாய் இருந்த அன்றிரவு நாம் அருந்திய தேநீரின் சுவை என்னில் மறையாமல் ...

ஒன்றாய் இதழ்முத்தம் பழக வாய்ப்பளித்த கடற்கரையின் சாரல் என்னில் விலகாமல் ...

நீ நடும் செடியெல்லாம் விருட்சமாகும் என்றனையே ... அதனால்தான்

நீ என் மனம் விதைத்து போன காதலும் விண்முட்டியதோ ?

உன்னை எனக்களித்த மார்ச் மாதத்திற்கு என் வாழ்த்துக்கள் !