December 30, 2011

நிலவும் நானும் ....


உதித்ததும் மறைந்து மறைந்ததும் உதிக்கும் நிலவே - நீயும்
குதித்து விட்டாயா மென்பொருள் துறையில்...
வேகமாக நான் விண்மீனில் படுக்கை விரிக்கிறேன் - நீயோ
மேகப் போர்வை போர்த்தி உறங்குகிறாய் ...
உனை எண்ணி உண்ணாமல் காத்திருக்கிறேன் -- நீயோ
எனை எண்ணி உடல் தேய்கிறாய் ...
களிப்புறும் கவிதை உனக்காய்த் தொடுக்கிறேன் - நீயெனை
விளிக்கும் அழகினில் அதை மறக்கச் செய்கிறாய்....

December 29, 2011

நானே என்னைக் காதலிக்கிறேன்...

நீ இதமாய் காதலிக்கிறேன் என சொல்லத் தேவையில்லை ...
உன் இதயத்தின் ஓசை உணர்கிறேனடா...
நீ புதியதாய் கவிதைகள் சொல்லத் தேவையில்லை ..
உன் பார்வையே உயிருள்ள கவிதையடா ...
நீ பிறந்தநாள் வாழ்த்து சொல்லத் தேவையில்லை ...
நான் பிறந்ததே உனக்காகத் தானடா...
நீ விதவிதமாய் பரிசுகள் தரத் தேவையில்லை ...
நான் விரும்பும் பரிசே நீதானடா ...
நீ என்னைக் காதலிக்கத் தேவையில்லை ...
உன்னை விரும்புவதால் நானே என்னைக் காதலிக்கிறேன்...

December 27, 2011

2011

புது வருடமாம் ... கடந்த வருடத்தைப் புரட்டிப் பார்க்கிறேன்...
உன் வாழ்த்தோடு தொடங்கிய ஜனவரி மாதம்...
உன் காதலர் தினப் பரிசில் பொலிவுற்ற பெப்ரவரி மாதம்...
மாதம் முழுதும் தங்குமாறு மார்ச்சில் நீ கொடுத்த முத்தம் ..
ஏப்ரலில் நாம் ரசித்த உலகக்கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம்..
சுட்டெரிக்கும் மே மாத வெயிலில் நாம் சுற்றித் திரிந்த கடற்கரை ....
உன் பிறந்த நாளையும் நம் பிரிவு நாளையும் ஒன்றாய்த் தந்த ஜூன் ..
உன் அருகாமையின்றி நான் வெறுத்த பிறந்தநாள் ஜூலையில் ...
என் பதினான்கு மாத பணிக்கு ஆகஸ்டில் நான் வைத்த முற்றுப் புள்ளி ..
புதிய கனவொன்றுடன் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய செப்டம்பர் ....
உனக்கு நிழற்படம் அனுப்ப அக்டோபரில் நான் அணிந்த தீபாவளி உடைகள் ...
இரவானால் இம்சைகள் கூட்டிய நவம்பர் மாத மழை நேரங்கள் ...
அடுத்த வருடம் என்ன சாதிக்கலாம் எனக் கனவிலேயே கழிந்த டிசம்பர் ...

December 23, 2011

விடையில்லா வினாக்கள் !!!

தனியாக நடந்து செல்கையில் கண்சிமிட்டும் தெரு விளக்கு
உன்னோடு வரும் பொழுது ஏனோ கண்மூடிக் கொள்கிறதே
நம் காதலைக் கண்ட நானத்திலோ ?
ஒற்றையாய் நடக்கும் பொழுது ஒளிந்துக் கொள்ளும் மேகம்
ஒன்றாய் நடக்கையில் மழைக்கரம் நீட்டுகிறதே
நம்மை ஒரேக் குடையில் இணைக்கவோ ?
நான் மட்டும் சென்றால் உடனே வரும் பேருந்து
இருவரும் சென்றால் தாமதம் செய்கிறதே
நம் காதல் நொடிகளை வளர்க்கவோ ?

December 18, 2011

உன் காதல்


பெருமழையில் குடை ---- உன் பார்வை !

பனியிரவில் போர்வை ---- உன் சுவாசம் !

குளிர்மாலையில் தேநீர் ---- உன் ஸ்பரிசம் !

அதிகாலையில் நாளிதழ் ---- உன் அழைப்பு !

சுடும்வெயிலில் பனிக்கூழ் ---- உன் முத்தம் !

December 15, 2011

(ஏ)மாற்றம் !

உன் மடி சாயும் நேரமெல்லாம் மாலைப் பொழுதென மாறினால்
இவ்வுலகில் காலைக் காண்பது அரிதாகிப் போகும் !
உன் விரல் கோக்கும் நிமிடமெல்லாம் மழைப் பொழிந்தால்
இவ்வுலகின் தாகம் தணிந்து விடும் !
உன் விழி காணும் தருணமெல்லாம் விடியல் என்றானால்
இவ்வுலகம் இரவென்பதை மறந்து விடும் !
என கனவுகள் வளர்த்து ...
என்னை நானே ஏமாற்றிக் கொள்கிறேன் .

December 13, 2011

புன்னகை

உன் சுவாசம் பெற்று வாசம் சூடிக் கொண்டது காற்று
உன் எண்ணம் பார்த்து வண்ணம் பூசிக் கொண்டன பூக்கள்
உன் பார்வை பட்டு பனிப்போர்வை விரித்துக் கொண்டன மரங்கள்
ஆனால்
உன் அனிச்சைப் புன்னகை ஒன்று போதும்
நான் மூர்ச்சையாகிப் போக ....

December 10, 2011

வெறுமை

பள்ளிக் காலங்களில் பார்வைகள் பகிர்ந்தாய்...

கல்லூரி நாட்களில் குறுஞ்செய்திகள் தொடுத்தாய்...

அலுவல் நேரங்களில் தொலைபேசியில் தொடர்ந்தாய்...

அத்தனையும் தொலைத்து தனிமையில் நானிருக்கும்போது மட்டும்

ஏன் இந்த வெறுமையை பரிசளிக்கிறாய் ?

விலகிச் சென்றாலும் விடாமல் நீளும் உன் பிரிவு ....

பிரிந்து சென்றாலும் பிரியாமல் உலுக்கும் உன் நினைவு 

நினைவில் கொண்டாலும் தொடரும் உன் கனவு ....

கனவு கலைந்ததும் தலையணை நனைக்கும் கண்ணீர்....

என உன் பரிசுகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது ...

இத்துடன் நிறுத்திக்கொள் நான் நிறைந்து விட்டேன் .....