November 2, 2012

மனோரஞ்சிதம் !

என்றும் மாறாத இளமையுடன் நாளும் பெருகிவரும் நம் ப்ரியம் நித்யகல்யாணி !

காதல் கொண்ட உன் பார்வை ஞாயிறை பார்த்ததும் பூக்கும் என் உள்ளம் தாமரை !

நீ காதல் புரிகையில் சிவந்துவிடும் ஐம்புலனும் இதழைந்து கொண்ட செம்பருத்தி !

என் இரவு நேரங்களை சுகந்தம் கொள்ளச் செய்யும் உன் ஸ்பரிசமோ பவள மல்லி !

எவ்விதம் நான் துயருற்றாலும் எனை ஆற்றித் தேற்றும் உன் புன்னகை தும்பைப் பூ !

சேர்த்து அணைக்கையில் நீ, தனக்குள் பனித்துளியை ஒளித்துக் கொள்ளும் பன்னீர்ப் பூ !

உன் முகம் மறைந்ததும் வாடும் நான், சூரியன் மறைந்ததும் தலைகுனியும் சூரியகாந்தி !

உன் வருகை என்னும் பொழுதே என் கன்னம் வந்து குடியேறும் நாணமோ செண்பகப் பூ !

தினம் நம் கூடல் நினைத்து அந்தியில் மலர்ந்துவிடும் என் பெண்மையோ அந்திமந்தாரை !

நாள்தோறும் உன்னுடன் அளவளாவ உதவும் விண்மீன், தோட்டத்தில் உதிரும் மல்லிகை !

பொழுது சாயும் வேளை எனை வந்தாட்கொள்ளும் உன் ஞாபகம், மறைக்க முடியா தாழம்பூ !

நம் காதல் வளரும் விதமோ மரத்தை நீங்கியும் வாசம் கூடிக் கொண்டே போகும் மகிழம்பூ !

நம் சிநேகம் உதித்த நாள் கணக்கை எண்ணினால் இருமுறை மலர்ந்திருக்கும் குறிஞ்சிப் பூ !

நிலவிநூடே உனை காண ஏங்கும் என் இதயம், நிலாக் கிரணங்களுக்கு காத்திருக்கும் அல்லி !

நம்முறவு மறுபடியும் துளிர்க்கையில் செடிக்கெல்லாம் வண்ணம் பூசியிருந்தது மார்கழிப் பூ !

ஒரு நாளும் நீங்காமல் மனதில் பிரவேசித்து எனைப் பித்தாக்கும் நீதான் என் மனோரஞ்சிதம் !



No comments:

Post a Comment