November 30, 2017

அந்த நாளும் வந்திடாதோ ?

கலைந்த முகிலோடு காற்றென கலப்பேனோ

கலையாத கோலத்தின் வண்ணமென மாறுவேனோ

கலையறியா சிறுவர்களின்  சிரிப்போடு சேர்வேனோ

கலைநிறை சிலையை சிறுவண்டாய் துளைப்பேனோ

களைப்பூட்டா கதையினுள்ளே கருவாய் மறைவேனோ

களைப்பாற்றும் மரங்களின்  நிழலாய் நிறைவேனோ

களை வளர்ந்த விளைநிலத்தில் மலராய் மலர்வேனோ

களை நீக்கிய பயிரினூடே  தும்பியாய் பறப்பேனோ

கழைக்கரும்பின் கழியில் இனிப்பாய் இணைவேனோ

கழை நிரம்பிய காட்டில் இசையாய் கரைவேனோ

கழைக்கூடை கனியுள்ளே  சுவையாய் ஒளிவேனோ

கழையாகிய நானும் குழலாவது என்றோ?


Related image

No comments:

Post a Comment