June 30, 2017

காற்றே !!!

மரத்தை உலுக்கி சருகுகள் நீக்கும் காற்றே - என்

கடந்த காலத்தை  உலுக்கி  நினைவுகள் அகற்றாயோ ?

குரலைக் கடத்திச் சென்று காதுகளில் சேர்க்கும் காற்றே -என்

கனவைக் கடத்திச் சென்று நிஜத்தில் சேர்ப்பிப்பாயோ ?

கனமில்லா  பட்டங்களை பறக்கவைக்கும் காற்றே - என்

கனத்த இதயத்தை  உயரப் பறக்கவைக்க மாட்டாயோ ?

கண்டங்கள்  கடந்து சுதந்திரமாய் உலவும் காற்றே -என்

எண்ணங்களில்  இருந்து  விடுதலை பெறச் செய்யாயோ ?

மேகத்தைக் கலைத்து மழையைப் பெய்விக்கும் காற்றே - என்

சோகத்தைக் களைந்து இன்பம் பொழிய வைப்பாயோ ?

புயலாய் மாறி நதிகளின் வழி மாற்றும் காற்றே -என்

வாழ்வில்  ஊடுருவி வலிகள் ஆற்ற மாட்டாயோ ?

குழலில் நுழைந்து இசையை உருவாக்கும் காற்றே - என்

மனதில் நுழைந்து நம்பிக்கையை கருவாக்க மாட்டாயோ ?

புகுந்து வெளிவந்து உயிரை காத்திருக்கும் மூச்சு  காற்றே !!!

என் இறுதி வேண்டுகோள் இதுதான்

எனக்குள் பிரவேசிப்பதை நிறுத்துவாயோ ?


1 comment:

  1. Super👌👌👌
    Proud to be Urr sister..
    😊😊

    ReplyDelete