August 16, 2017

மனதில் ஒரு மழைக்காலம் !

வானமும்  இருண்டது வனமும் இருண்டது

என்னறை மட்டும் இருளவில்லை

உன்நினைவு போல் மேகத்திற்கு இருளூட்டத் தெரியாதோ !

கொடியும்  சிலிர்த்தது மலரும்  சிலிர்த்தது

என்னுடல் மட்டும் சிலிர்க்கவில்லை

உன்விரல்போல் காற்றுக்கு சிலிர்ப்பூட்டத்  தெரியாதோ !

குடையும் நனைந்தது  உடையும் நனைந்தது

நான் மட்டும் நனையவில்லை

உன்முத்தம் போல்  மழைக்கு  நனைக்கத்  தெரியாதோ !

குளமும் நிரம்பியது குறுநதியும் நிரம்பியது

என் மனம் மட்டும் நிறையவில்லை

உன்விழிபோல் வெள்ளத்திற்கு நிரப்பத்  தெரியாதோ !

மரமும் சாய்ந்தது  சாதகப்பலகையும்  சாய்ந்தது

என்மனம் மட்டும் சாயவில்லை

உன்குரல்போல் நீருக்கு என்னை சாய்க்கத்  தெரியாதோ !

ஊருக்கெல்லம் ஒரேயொரு மழைக்காலம் -

உன்னால் தினம் தினம் என் மனம் காணும்  மழைக்காலம் !!!

No comments:

Post a Comment