January 3, 2013

ஓவியன் !!!


நிமிர்ந்து நிற்கும் மலர்கள் வான் நோக்க தலைகுனிந்து மண்நோக்கும்

குவளை மலரிடமிருந்து ஊதா வண்ணம் குழைத்துக் கொண்டான் !

நிறைந்து நிற்கும் விண்மீன்கள் நிலவுக்குத் துணை செல்ல தனித்திருக்கும்

இரவுவானிடமிருந்து கருநீல வண்ணம் இரவல் வாங்கிக் கொண்டான் !

விரைந்து வரும் அலைகள் நுரைகளோடு கைகோத்துக் கொள்ள பரந்திருக்கும்

கடலிடமிருந்து நீல வண்ணம் கடன் வாங்கிக் கொண்டான் !

விடியப் போகும் வேளையில் மரங்கள் பனிப்போர்த்தியிருக்க விழித்திருக்கும்

பசும்புல்லிடமிருந்து பச்சை வண்ணம் பறித்துக் கொண்டான் !

தலை நிறைக்கும்  பூக்களின் நடுவே தரை நிறைத்துக் கொண்டிருக்கும்

கொன்றைப்பூவிடமிருந்து மஞ்சள் வண்ணம் கொள்ளைக் கொண்டான் !

இரவு முடிய காத்திருக்கும் பகலுக்கு முகம் மறைத்து பிரிவு சொல்லும்

அந்தி நேர சூரியனிடமிருந்து செம்மஞ்சள் வண்ணம்  அள்ளிக் கொண்டான் !

உலகம் காண கண்ணும் சுவாசிக்க நாசியும் திறந்துக் கொள்ள குழந்தையின்

திறவாக் கரங்களிலிருந்து சிவப்பு வண்ணம் திருடிக் கொண்டான் !

களவாடிய வண்ணங்கள் கொண்டு மழைத் தூரிகையால்

வானச் சுவரில் வரைந்து விட்டான் வானவில் ஓவியம் !

ஓவியன் மட்டும்  ஒளிந்துக் கொண்டான் !!!




No comments:

Post a Comment