30 நவம்பர், 2017

அந்த நாளும் வந்திடாதோ ?

கலைந்த முகிலோடு காற்றென கலப்பேனோ

கலையாத கோலத்தின் வண்ணமென மாறுவேனோ

கலையறியா சிறுவர்களின்  சிரிப்போடு சேர்வேனோ

கலைநிறை சிலையை சிறுவண்டாய் துளைப்பேனோ

களைப்பூட்டா கதையினுள்ளே கருவாய் மறைவேனோ

களைப்பாற்றும் மரங்களின்  நிழலாய் நிறைவேனோ

களை வளர்ந்த விளைநிலத்தில் மலராய் மலர்வேனோ

களை நீக்கிய பயிரினூடே  தும்பியாய் பறப்பேனோ

கழைக்கரும்பின் கழியில் இனிப்பாய் இணைவேனோ

கழை நிரம்பிய காட்டில் இசையாய் கரைவேனோ

கழைக்கூடை கனியுள்ளே  சுவையாய் ஒளிவேனோ

கழையாகிய நானும் குழலாவது என்றோ?


Related image

26 நவம்பர், 2017

மனக்கன்று !

கட்டுடலின் ரோமம் நினைவூட்டும்  கம்பளி 

கட்டியவிழ்த்ததால் மெருகேறி கிடக்கும் புடவை 

கட்டியணைத்து உறங்கிய தலையணை 

கட்டுக்கடங்காமல் கொண்டிருந்த காதல் வெறி

கட்டிலில் கருவாகிய வரியில்லா கவிதைகள் 

கட்டுக்கதைகளால் நிறைந்திருந்த கடந்த காலம் 

கட்டிவெல்லச் சிரிப்பில் கலந்திருக்கும் கவலை 

கட்டுக்கட்டாய் குவிந்திருக்கும் வாழ்த்து மடல்கள் 

கட்டிவைத்தாலும் கொட்டித்தீர்க்கும் மலரின்மணம் 

கட்டுமரம் கண்முன் மறையும்  கடற்கரை 

கட்டியகுழலோடு சேராமல் தனித்தாடும் ஒற்றை முடி 

                               என எதை நினைப்பினும் என் மனம் 

கட்டுத்தறியாய்  உன் நினைவை நெய்யத் தொடங்குதடா !!!

கட்டவிழ்த்ததும் உனை நோக்கி வருகின்றதே 

என் மனமும் கன்றுதானோ ?




25 நவம்பர், 2017

அந்தாதி

கனம் உன்னை பிரிந்தாலும் 
கனம் கூடுதே மனம் 

மனம் உன்னை நினைத்தாலும் 
மணம் கூடுதே காற்றில் 

காற்றில் கூந்தல் கலைந்தாலும் 
கரம் தேடுதே கண்கள் 

கண்கள் என்மேல் பட்டாலும் 
காதல் தேடுதே இதயம் 

இதயம் இரண்டும் இணைந்தாலும் 
இதழ்கள் கேட்குதே  முத்தம் 

முத்தம் நூறு வைத்தாலும் 
முழுமையடையவில்லையே !

நம் காதலும் அந்தாதிதான் 
முடிந்த  இடத்திலேயே தொடங்குகிறது !!!!