March 29, 2017
March 23, 2017
கோடையில் குளிர்
குளிர்நீர் குடிக்க விரும்பி குழவிகளும் அடம்பிடிப்பர்
குளிர்பான கடைகள் தேடி இளைஞர்கள் இடம் பிடிப்பர்
குளிர் பிரதேசங்கள் நோக்கி குடும்பத்துடன் படையெடுப்பர்
குளிர்சாதனப் பெட்டியின் உறைவிப்பானை நிரப்பி வைப்பர்
குளிரூட்டிகளுக்கு ஒருநாளும் ஓயாமல் வேலை கொடுப்பர்
குளிர்காற்று வேண்டி மொட்டை மாடியில் இரவைக் கழிப்பர்
குளிர்நிழல் விழைந்து வெயிலிலும் குடையோடு பயணிப்பர்
குளிர் நீங்க மறுத்து குளியலறையில் சிலநேரம் தவமிருப்பர்
அட ......குளிர்காலத்தை விட கோடையில்தான்
குளிர் அதிகம் பேசப்படுகிறது ........
ஆனால் இவையெல்லாம் எனக்கு புரிவதில்லை - ஏனெனில்
கோடை வெயிலும் நான் உன் வசமிருக்க
குளிர்நிலவாய்த் தெரிகிறதே !
March 10, 2017
நிபந்தனையில்லா உலகம் !!!
பூத்தொடுக்க மட்டுமே உதவினோம் - இன்று
போர் தொடுக்கவும் துணிந்து விட்டோம் *
பெற்று விட்டோமா சம உரிமையை ?
பள்ளி செல்லக்கூட உரிமையில்லை - இன்று
பல நாடுகள் சென்று பயில்கிறோம் *
பார்த்து விட்டோமா விடுதலையை ?
ஓட்டு போட அனுமதியில்லை - இன்று
ஒன்றாய் பாராளுமன்றத்தில் அமர்கிறோம் *
அடைந்து விட்டோமா சுதந்திரத்தை ?
வீட்டில் மட்டுமே வேலை செய்தோம் - இன்று
விண்வெளியில் கூட உலவுகிறோம் *
வெளிவந்தோமா அடிமைச்சிறையிலிருந்து ?
வீதியில் நடக்க தயங்கினோம் - இன்று
விமானம் இயக்கி பழகுகிறோம் *
வந்துவிட்டதா விடியல் ?
(* நிபந்தனைகளுக்கு உட்பட்டது )
நிபந்தனையில்லா உலகம் செய்யும் வரை
வலிகள் தொடரும் ....
மகளிர் தின வாழ்த்துகள் !!!

March 5, 2017
கணக்கு !!!
பள்ளிக்கால கனவுகள் நினைவு கூர்ந்தால்
வெள்ளிவானின் தூரம் சிறிதாய்த் தோன்றும் !!!
கல்லூரி நாட்களின் நட்புகள் கணக்கெடுத்தால்
கடல்மீறி விழுந்திடும் அலைகள் துளிகளாய்த் தோன்றும் !!!
காதல் பொழுதுகளின் பரிசுகள் குறிப்பெடுத்தால்
பாதங்கள் கடந்த கடற்கரை மணல் குவியலாய்த் தோன்றும் !!!
என் மகளுக்கு நானீந்த முத்தங்கள் எண்ணிப் பார்த்தால்
விண்மீன்கள் விரல் விட்டென்னும் புள்ளிகளாய்த் தோன்றும் !!!
இவை இருக்கட்டும் .......
கணவனாய் நீ கொட்டும் காதல் அளக்க விழைந்தால்
கண்ணெதிரே விரியும் உலகமே கடுகாய்ச் சிறுத்து விடும் !!!
Subscribe to:
Posts (Atom)