21 டிசம்பர், 2025

மாயாவி !

என்னை அழகாக்கிட 

எப்பொழுதும்  விழைவான் 

என் மாயக்கண்ணாடி அவன் !


மனதில் நினைத்ததை 

மணிப்பொழுதில் நிறைவேற்றுவான் 

மகத்தான மாயமோதிரம் அவன் !


இதயம் விரும்பும் இடங்களுக்கு 

இமைப்பொழுதில் இட்டுச்செல்வான் 

இதமான மந்திரக்கம்பளம் அவன் !


மந்தகாச புன்னைகையாலும் 

மயக்கும் வார்த்தைகளாலும் 

மனதை பறிப்பான் ! மாயாவி அவன் !

26 நவம்பர், 2025

மனமொழி

 எதை நினைத்து முகர்கிறோமோ

அதுவாய் மணக்குமாம் மனோரஞ்சிதம் !!!

நான் உரைக்காமலே 

என் மனமொழிகள் 

உணரும் உனக்கு 

சரியான பெயர்தான் சூட்டியிருக்கிறார்கள் 

ரஞ்சித் !!!




27 ஜூலை, 2020

பெருங்கொடையே !

வார்த்தைகளை வரையறையோடு விடுவிக்கிறாய் !

வாசனைகளையும் வடிகட்டி என்னுள் சேர்க்கிறாய் !

என் புன்னகைகளை பிறர் ரசிக்க நீ விடுவதில்லை 

நான் தனித்திருப்பதை தவிர்க்க 

உனை நான் நீங்குவதுமில்லை !

உதடு பொருத்தினாய்
 
கன்னம் தழுவினாய்

காதுமடல் வரை நீள்கிறாய் ! 

என் காதலனின் குணமனைத்தும் உனக்கும் இருப்பதால்

உன்னையும் காதலிக்க தொடங்கிவிட்டேன் !

கொரோனா கொடுத்த பெருங்கொடையே - என் முகக்கவசமே !


24 ஜூலை, 2020

ஒட்டடை


விட்டத்தின் தனிமையை தணிக்க வந்தாயோ ?

வீட்டின் வெறுமையை விலக்க வந்தாயோ ?

எட்டுகால்களினால் செதுக்கப்பட்ட  எட்டாச் சிற்பமோ ?

எட்டிப் பிடிக்க ஒற்றைக்கோல் வேண்டுமோ ?

ஒட்டி உறவாட உயரம்தான் விருப்பமோ ?

"ஒட்டடை உனக்கும் என் மீது காதலோ ?

அடிக்கடிதோன்றி இம்சிக்கிறாயே !!!"

23 ஜனவரி, 2019

அவள் - குறுகத் தரித்த குறள்

அணு ஆயுதங்கள் தேவையில்லை - அவளின்

               அழுகை போதும் என்னைத் துகள்களாக்க !

அனுசரணைகள் தேவையில்லை - அவளின்

                அழைப்பு போதும் என்னைக் குழைவாக்க !

அனுதினமும் பூச முகப்பூச்சு தேவையில்லை - அவளின்

                 அரைகுறை  முத்தம் போதும் என்னை சிவப்பாக்க !

அனுகூலம் தரும் உறவுகள் தேவையில்லை - அவளின்

                  அம்மா எனும் குரல்  போதும் என்னை மகிழ்விக்க !

அனுபவம் பெற்ற ஆசான் தேவையில்லை -அவளின்

                  அசாதாரண கேள்விகள் போதும் என்னை சிறப்பாக்க !

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி

குறுகத் தரித்தது குறள் மட்டுமல்ல அவளும்தான் !!!

என்னை மகிழ்விக்கும் மகள் !!!