January 11, 2018

காதல் கயிறு !

கனவுத்தொட்டிலில் என்னை உறங்கவைக்கும் 

நீ தூளிக்கயிறு !

காதல் மங்கையாய் என்னைச் சிறகடிக்கவைக்கும் 

நீ ஊஞ்சல்கயிறு  !

மனக்கேணியிலிருந்து கவிதை கிளர்ந்திழுக்கும் 

நீ வாளிக்கயிறு !

இல்லாத அழகை வார்த்தையால் வர்ணிக்கும் 

நீ மணல்கயிறு !

இதயயிரும்பினை உருகாமல் கவர்ந்திழுக்கும் 

நீ காந்தக்கயிறு !

ஓயாமல் வளைக்கரம் பற்றிக்கொள்ளும் 

நீ காப்புக்கயிறு !

லட்சியக்காளையை பிடித்திழுக்க உதவும் 

நீ மூக்கணாங்கயிறு !

வெற்றிகளில் நான் துள்ளும்பொழுது களிக்கும் 

நீ தாண்டும்கயிறு !

சாதனைகள் நான் புரிய சீராய் வழிகாட்டும் 

நீ ஏணிக்கயிறு !

வாழ்வலையில் நம் காதல் தொலையாமல் பேணும் 

நீ தோணிக்கயிறு !

சோகங்களை அன்பால் உலரச்செய்யும் 

நீ கொடிக்கயிறு !

துவளும் பொழுதுகளில் என்னைத் தாங்கும் 

நீ கட்டில்கயிறு !

உடல்மட்டும் என்வசம் விட்டு உயிரை வைத்திருக்கும் 

நீ பாசக்கயிறு !

என்றும் விலகாமல் என்னுடனே இரு !!!





No comments:

Post a Comment