22 டிசம்பர், 2017

காற்று வெளியிடை

உன்னறை திறந்து திறந்து 

                  உன்னை என்னுள் செலுத்திக் கொள்கிறேன் 

உன்னுரைக் கவர்ந்து கவர்ந்து 

                  உன்னை என்னுள் ஒளித்துக் கொள்கிறேன் 

உன்மணம் உணர்ந்து உணர்ந்து 

                  உன்னை என்னுள் நிரப்பிக் கொள்கிறேன் 

உன்னெதிர் அமர்ந்து அமர்ந்து 

                  உன்னை என்னுள் கடத்திச் செல்கிறேன்

உன்நகை கொணர்ந்து கொணர்ந்து 

                  உன்னை என்னுள் குவித்து வைக்கிறேன் 

உன்னால் நான் நிரம்பிய பின்னும் 

                  உன்னை வெளியில் தேடுகிறேன் !!!



12 டிசம்பர், 2017

இடம் பொருள் காலம் !

இருளைத் தவணை முறையில்

                      இடையிடையே அப்பத் துவங்கியிருக்கும் இரவில்

இசை உணரா செவிகளுக்கு   தினமும்

                      இசை கொணரும்  கடலலைகளின் அருகில்

இரவல் ஒளியும் இதயம் வருடும்  குளிரும் 

                       இணைத்து  ஒருங்கே உமிழும் நிலவொளியில்

இலை கவிழ்ந்தும் அந்தி மயங்கியதால்

                       இதழ் குவிந்தும் மணம் தவழும் வனத்தில்

இமை பொருத்தி இடை வளைத்து

                        இதழ் துவைத்து  இன்பம் கண்டிருந்தோம் !

இன்று

        இரவில்லை

                    இசையில்லை

                                நிலவில்லை

                                            வனமில்லை

ஆனாலும் இன்பமோ ஏராளம் !!!

இணைவது உன்னோடென்றால் இடம் பொருள் காலமேது ?