30 ஜூலை, 2017

விந்தை மனிதர்கள் -3

ர்மத்தை காக்க போராடுபவன் அல்ல -

தாரத்தை தோல்வியிலிருந்து மீட்பவனே வெற்றியாளன் !

தினமும் திறமைகள் வெளிக்காட்டுபவன் அல்ல -

தீராமல் காதலிக்கும் மனைவியை நேசிப்பவனே  தலைவன் !

துயரங்கள் துடைக்க ஓடிச்செல்பவன் அல்ல -

தூக்கம் தொலைக்கும்  துணையை  மதிப்பவனே பண்பாளன் !

தெரியாத மனிதருக்கும் இறங்குபவன் அல்ல -

தேடிக்  கிடைக்கா  இல்லாளுக்கு  உதவுபவனே தயாளன் !

தையலை மையலுறச் செய்பவனே காதலன் !

தொலைதூர உறவுகளை நினைவுகூர்பவன் அல்ல -

தோளில் சாய்ந்து  அவளை தேற்றுபவனே  நண்பன் !

பிறருக்கும் பிரியமானவளுக்கும் வித்தியாசம் தெரியாமல்

பாகமானவளை சோகமாக்கும் விந்தை மனிதர்கள் !!!






19 ஜூலை, 2017

விந்தை மனிதர்கள் - 2

ரித்திரம் பேசும் வீரர்கள் சிலர்

சான்றோர் ஏசும் கோழைகள் பலர்

சிகரம் தொட உழைப்பவர் சிலர்

சீக்கிரம் உயர நடிப்பவர் பலர்

சுதந்திரம் வேண்டி மரித்தவர் சிலர்

சூழ்ச்சிகள் செய்து பிழைத்தவர் பலர்

செய்த புண்ணியத்தில் களிப்பவர் சிலர்

சேர்த்த பாவத்தை சுமப்பவர் பலர்

சைன்யங்கள் தோன்ற வித்திட்டோர் சிலபலர்

சொல்லை செயலாக்கி உயர்பவர் சிலர்

சோம்பித் திரிந்து சரிபவர் பலர்

சௌக்கியமாய் வாழ பிறரை அழிக்கும் சிலர்

சிலருக்கும் பலருக்கும் இடையில்

சிக்கித் தவிக்கும் விந்தை மனிதர்கள் !!!!

14 ஜூலை, 2017

விந்தை மனிதர்கள் - 1

டலில் கரைக்கான தேடல் 

காதலில் உறவுக்கான தேடல் 

கிழக்கில் விடியலுக்கான தேடல் 

கீழ்வானில் விண்மீனுக்கான தேடல் 

குரலில் இனிமைக்கான  தேடல் 

கூற்றில் உண்மைக்கான தேடல் 

கெட்டதில் நல்லதுக்கான தேடல் 

கேட்டதில் அனுபவத்திற்கான தேடல் 

கையில் பெறாதவைக்கான  தேடல் 

கொட்டும் மழையில் குடைக்கான தேடல் 

கோபத்தில் ஆறுதலுக்கான தேடல் 

என தேடல்களிலேயே தொலைந்து போகும் மனிதர்கள் !!!